விழுப்புரம் அருகே குண்டலிப்புலியூரில் அன்புஜோதி ஆஸ்ரமத்தில் பராமரிக்கப்பட்டு வந்த மனநலம் குன்றிய, ஆதரவற்ற பெண்கள் பலர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது. புகாரின் பேரில், நேற்று (பிப்.18) தேசிய மகளிர் ஆணையக் குழுவினர் விசாரணை நடத்திய நிலையில், இன்று (பிப்.19) தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் விசாரணை நடத்தியது.
அன்புஜோதி ஆஸ்ரமத்தில் இருந்து விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வரும் பாதிக்கப்பட்ட பெண்களை நேரில் சந்தித்து, தமிழ்நாடு மாநில மகளிர் ஆணைய தலைவர் ஏ.எஸ்.குமாரி தலைமையிலான குழுவினர் ஆட்சியர் பழனி முன்னிலையில் விசாரணை நடத்தினர்.
விசாரணைக்குப் பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஏ.எஸ்.குமாரி, “மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் 16 பெண்களை நேரில் சந்தித்து விசாரணை நடத்தி இருக்கிறோம். அதில், பலர் அடித்து துன்புறுத்தி இருப்பதும், இரண்டு பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை செய்திருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட இரண்டு பெண்களும் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் இருவரும் ஓரளவு மனநலம் பாதிக்கப்பட்டவர்கள். மேலும், மகளிரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மகளிர் மனநல காப்பகங்களை நடத்த அரசுக்கு பரிந்துரை செய்யப்படும்” என தெரிவித்தார்.
இந்த விசாரணையின்போது மகளிர் ஆணையத்தின் உறுப்பினர் சீதாபதி, விழுப்புரம் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் தங்கவேலு, மருத்துவக் கல்லூரி ஆர்எம்ஓ வெங்கடேசன், மனநல மருத்துவத்துறை தலைவர் மருத்துவர் புகழேந்தி, பொதுநல மருத்துவர் பாபு ஆகியோர் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: Villupuram Ashram Case:விழுப்புரம் ஆசிரமத்தில் பாலியல் வன்கொடுமை நடந்தது உறுதி - தேசிய மகளிர் ஆணையம்