பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், "பாமக அதிமுகவுடன் கூட்டணி வைக்கவில்லை என்றால், அவர்கள் இன்று ஆட்சியில் இருந்திருக்க முடியாது. உள்ளாட்சித் தேர்தலில் கால்சீட்டு, அரை சீட்டு, முக்கால் சீட்டு என்று கொடுத்து நம்மைக் கெஞ்ச வைத்தார்கள்.
நாங்கள் கொள்கையை மாற்றிக்கொண்டு அதிமுகவுடன் கூட்டணி வைத்தோம். ஆனால், அதற்கான அங்கீகாரம் நமக்கு கிடைக்கவில்லை" என்றார்.
அவரது கருத்து அதிமுக கூட்டணியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், "நாங்கள் குற்றஞ்சாட்டவில்லை; கருத்து மட்டுமே தெரிவித்தோம். எங்களுடைய கருத்துக் கூட்டணியில் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது.
குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து ஒரு சில தலைவர்களுக்கு புரிதல் இல்லாததால் மற்றவர்களைத் தூண்டிவிட்டு போராட்டத்தில் ஈடுபடுத்தி வருகின்றனர். குறிப்பாக கல்லூரி மாணவர்களைத் தூண்டி விடுகின்றனர். இந்தச் சட்டம் குடியுரிமையைப் பறிப்பதற்கான சட்டம் அல்ல; கொடுப்பதற்கான சட்டம். இதனால் யாரும் அச்சம் அடையத் தேவையில்லை.
இந்த குடியுரிமைத் திருத்தச் சட்டம் இஸ்லாமியர்களின் குடியுரிமையைப் பறிக்கும் சட்டம் என சிலர் பொய் பரப்புரை செய்து வருகின்றனர். இந்தச் சட்டத்தால் யாருடைய குடியுரிமையும் பறிக்கப்படாது. இதனை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கோலம் போடுபவர்களைக் கைது செய்வது தவறான செயல். அவர்களுக்கு இந்தச் சட்டம் குறித்த புரிதல், விழிப்புணர்வு ஆகியவற்றை ஏற்படுத்த வேண்டும். புரிதல் இல்லாமலே சிலர் போராடி வருகின்றனர். தேசிய குடியுரிமை பதிவேடு தமிழ்நாட்டிற்கு தேவையில்லாதது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:
குடியுரிமை திருத்தச் சட்டம்: கோலமிட்டு மகளிர் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்!