விழுப்புரம்: அதிமுக தலைமை கட்சி அலுவலகத்தில் புதன்கிழமை முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம் செய்தியாளரை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "தமிழகம் முழுவதும் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் திட்டமிட்டு அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களுடைய வீடுகளில் சோதனை செய்து வருகின்றனர் இது கண்டிக்கத்தக்கது. திமுக ஆட்சி எப்போது வேண்டுமானாலும் மாறும், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி மீதும் காவல்துறையினர் மீதும் வழக்கு தொடருவோம், இதனை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் தெரிந்து கொள்ள வேண்டும்.
சில ஊடகங்கள் மற்றும் செய்தி செய்தித்தாள் திமுகவின் முரசொலி செய்தித்தாளின் அங்கமாக செயல்பட்டு, என்னைப் பற்றி தவறான செய்திகளைப் பரப்பி வருகின்றனர். உண்மையை ஆராய்ந்து, உண்மையான செய்திகளை நேரில் சென்று விசாரணை செய்து ஊடகங்கள், செய்தித்தாள்கள் செய்திகளை வெளியிட வேண்டும்” என்றார்.
பொன்முடி பேசியது குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர் “புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி செல்வி ஜெயலலிதா யாரையும் அடுத்த முதலமைச்சர் என கை காட்டவில்லை. ஜனநாயக முறையில் அதிமுகவில் உள்ள உண்மை தொண்டர்களே, முதலமைச்சர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆனால் திமுகவில் வாரிசு அரசியல் இருக்கின்றது. கலைஞருக்கு பிறகு தலைவராக வர அன்பழகன், வீராசாமி, துரைமுருகன் உள்ளிட்டோருக்கு தகுதி இல்லையா? ஸ்டாலினுக்கு தான் அந்த தகுதி உள்ளதா, இனி அவருக்கு பின் உதயநிதி தான் தலைவராக வரப்போகிறார்.
என் அப்பா என்னை அமைச்சராக்கவில்லை, திமுகவைப் போல நடிகைகளுடன் சுற்றிக்கொண்டிருந்தவரை அழைத்து வந்து கோட்டையில் அமர வைக்கவில்லை, நானாக படிப்படியாக முன்னேறி வந்தேன். அமைச்சர் பொன்முடிக்கு என்னைப் பற்றி பேசவில்லை என்றால், கட்சியிலிருந்து தூக்கி விடுவார்கள் என்ற அச்சம் அவருக்கு உள்ளது. அதனால் என்னைப் பற்றி அவர் பேசி வருகிறார். அவர் ஒரு டம்மி பீஸ், அவரைப்பற்றி நான் பேச விரும்பவில்லை. அவர் என்னைப் பற்றி பேசுவதற்கு எந்த ஒரு தகுதியும், அருகதையும் அவரிடம் இல்லை. இப்படி நாரதர் வேலை பார்ப்பது என்னிடம் பலிக்காது. தமிழ்நாட்டில் அதிமுகவின் உண்மை தொண்டர்கள் இருக்கும் வரை அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது” இவ்வாறு கடுமையாக விமர்சித்தார்.
இதையும் படிங்க: பாஜக - திமுக கூட்டணியா? முற்றுப்புள்ளி வைத்த மு.க.ஸ்டாலின்!