தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும், ஏப்ரல் 18ஆம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறும் என தலைமைத் தேர்தல் ஆணையம் கடந்த 10ஆம் தேதி அறிவித்தது. அதைத்தொடர்ந்து, தேர்தல் விதிகள் அமலுக்கு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, விழுப்புரம் நகராட்சி பகுதிகளில் சுவர் விளம்பரங்கள் மற்றும் பேனர்கள் அமைக்க முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கிராமப் பகுதிகளில் அனுமதி பெற்று தனிநபர் இடங்களில் மட்டுமே விளம்பரம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், விதிகளை மீறி சுவர் விளம்பரம் செய்பவர்கள் மீது வழக்குப்பதிவு செய்வதுடன், அதனை அகற்றுவதற்கான கட்டணமும் சம்பந்தப்பட்ட நபர்களிடம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், விழுப்புரம் அருகே உள்ள பேரங்கியூர் ஆற்று பாலம், பிடாகம் மற்றும் ஜானகிபுரம் மேம்பாலம் உள்ளிட்ட பல பொது இடங்களில் அதிமுக சார்பில் ஜெயலலிதா பிறந்தநாளுக்கு எழுதப்பட்ட சுவர் விளம்பரங்கள் இதுவரையில் அழிக்கப்படாமல் உள்ளது.
இதனைப் பார்க்கும் பொதுமக்கள் விதிமுறைகள், கட்டுப்பாடுகள் உள்ளிட்ட அனைத்தும் சாதாரண ஏழைகளுக்கு மட்டும் தானா? ஆளுங்கட்சியினருக்கு எல்லாம் பொருந்தாதா? என கேள்வி எழுப்புகின்றனர்.