அதிமுக இளைஞர் பாசறை மற்றும் இளம்பெண்கள் பாசறை சார்பில் விழுப்புரம் மாவட்டத்தில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் நேமூர், பனையபுரம், கெடார், கல்பட்டு ஆகிய பகுதிகளில் உறுப்பினர் சேர்க்கை பணி நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு சட்டத் துறை அமைச்சர் சி.வி. சண்முகம் கலந்துகொண்டு புதிய உறுப்பினர்களுக்கான அட்டையை வழங்கினார். இறுதியாக கல்பட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், "அதிமுக தொண்டர்களால் உருவாக்கப்பட்ட இயக்கம். இந்த இயக்கத்தில் இணையும் இளைஞர்களுக்குச் சிறப்பான எதிர்காலம் உண்டு. நம்பி வாருங்கள்" என்றார்.
மேலும் பேசிய அவர், "திமுகவைப்போல அதிமுக அல்ல. அங்கு ஒரே குடும்பத்தினரே கட்சி பொறுப்புக்கும், ஆட்சி அதிகாரத்துக்கும் வருவர்" என்றார்.
இந்நிகழ்வில், விக்கிரவாண்டி சட்டப்பேரவை உறுப்பினர் முத்தமிழ்செல்வன், அதிமுக பாசறை பொறுப்பாளர்கள், தொண்டர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.