விழுப்புரம்: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சுமார் 30 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, அவருக்கு 30 நாள்கள் பரோல் வழங்க வேண்டும் என்று அவரது தாயார் அற்புதம்மாள், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்திருந்தார்.
அதன்படி, பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல் வழங்கப்பட்ட நிலையில், மே 28ஆம் தேதி சென்னை புழல் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். பேரறிவாளனுக்குத் தொடர் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதால் மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிக்கப்பட்டது.
தொடர்ந்து மீண்டும் 30 நாள்கள் பரோல் கேட்டு அற்புதம்மாள் அளித்த கோரிக்கையின் பேரில், மேலும் ஒரு மாதம் பரோலை தமிழ்நாடு அரசு வழங்கியது.
இந்நிலையில் சிறுநீரகத் தொற்று, ரத்த அழுத்தம், மூட்டு, கண் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு விடுப்பில் வெளிவந்த பேரறிவாளனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நோய்த் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துள்ளதால் விழுப்புரம் தனியார் மருத்துவமனையில் பேரறிவாளனை உள் நோயாளியாக அனுமதிக்க மருத்துவர்கள் பரிந்துரைத்த நிலையில், இன்று உள் நோயாளியாக அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க:குஜராத் முதலமைச்சராக பூபேந்திர படேல் பதவியேற்பு