விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் நகராட்சியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வாரியம் மூலம் திடக்கழிவு மேலாண்மை திட்டப்பணிகள் மற்றும் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நடைபெற்றுவருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் த.மோகன் முன்னிலையில் இன்று (மே 14) நகராட்சிகள் நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்துறையின் அரசு கூடுதல் தலைமை செயலாளர் சிவ்தாஸ் திடீரென ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, அரசு கூடுதல் தலைமை செயலாளர் திண்டிவனம் நகராட்சியில் சலவாடி சாலையில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் இயற்கை உரம் தயாரிக்கும் பணிகள் நடைபெற்றுவருதை பார்வையிட்டு பணியாளர்களிடம் அதன் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.
அதனைத் தொடர்ந்து, பணியாளர்களிடம் கூடுதல் தலைமை செயலாளர் அவர்கள் தெரிவிக்கையில், நாள்தோறும் நகர்ப் பகுதியில் வீடுகளில் பெறப்படும் குப்பைகளை மக்கும் குப்பை மக்காத குப்பையாக தரம் பிரித்து எடுத்து வரவேண்டும்.
குப்பைகளை தரம் பிரிக்க ஆலோசனை: ஒவ்வொரு நாளும் சேகரித்து வரப்படும் குப்பைகளை அன்றைய தினமே தரம் பிரித்து, மக்கும் குப்பைகளை இயற்கை உரம் தயாரிப்பதற்கும் மக்காத குப்பைகளை சாலை பயன்பாட்டிற்கு பயன்படும் வகையில் பிரிப்பதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு நாளும் தயாரிக்கக்கூடிய இயற்கை உரங்களை விவசாயிகளுக்கு பயன்பாட்டிற்கு வழங்கும் வகையில் இருப்பதன் மூலம் நாள்தோறும் பணியாளர்களுக்கான வருமானம் கிடைப்பதுடன் தூய்மையும் பாதுகாக்கப்படும் என ஆலோசனை வழங்கினார்.
பின்னர் குப்பைகள் சேகரிக்கப்பட்ட கிடங்கினை பார்வையிட்டு நாள்தோறும் குப்பைகளை தரம் பிரித்து பாதுகாக்க வேண்டும். அதேபோல், சேமிப்பு கிடங்கினை சுற்றி பாதுகாப்பு கொட்டகைகள் அமைத்து பொதுமக்களுக்கு சுகாதார பாதிப்பு ஏற்படாத வண்ணம் குப்பைகளை பாதுகாப்பாக வைத்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
இதையும் படிங்க: மலிவான அரசியல்- அண்ணாமலையை வாரிய துரை வைகோ!