விழுப்புரம்: ஆரோவில் அருகே பெரிய முதலியார்சாவடியில் உள்ள நடிகை அமலா பாலின் வீட்டில் அவரும் அவரது நண்பருமான பவ்நிந்தர் சிங் இருவரும் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு தங்கியிருந்தனர். அப்போது இவருக்கும் இடையே பணப் பரிவர்த்தனை நடந்துள்ளது. இந்த நிலையில் கடந்த வாரம் விழுப்புரம் மாவட்ட தலைமை குற்றப்பிரிவு போலீசாரிடம் அமலா பால் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரில், பவ்நிந்தர் மற்றும் அவரது குடும்பத்தினர் தன்னிடம் பணம் பெற்றனர். திருப்பி கேட்டபோது, நானும் பவ்நிந்தர் சிங்கும் இணைந்து இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவோம் என்று மிரட்டுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
அதனடிப்படையில் பவ்நிந்தர் சிங், அவரது தந்தை சுந்தர் சிங் உள்ளிட்ட 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பவ்நிந்தர் சிங் கைது செய்யப்பட்டார். அதோடு பவ்நிந்தர் சிங் ஜாமீன கேட்டு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த வானூர் நீதிமன்ற நீதிபதி வரலட்சுமி, பவ்நிந்தர் சிங்குக்கு நிபந்தனையற்ற ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். இதுகுறித்து அவரது வழக்கறிஞர் பாலாஜி கூறுகையில், "அமலாபாலும், பவ்நிந்தர் சிங்கும் திருமணம் செய்துகொண்டது தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்த வழக்கிலும் இருவரும் பதிவு திருமணம் செய்துகொண்டு ஒரே வீட்டில் குடும்பம் நடத்தி வந்ததற்கான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. அதனடிப்படையில் எந்தவிதமான நிபந்தனையும் இன்றி ஜாமீன் வழங்கப்பட்டது எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பல்லி விழுந்த சத்துணவை சாப்பிட்ட 25 மாணவர்கள் மயக்கம்