விழுப்புரம்: திண்டிவனம் அடுத்த கோனேரிகுப்பம் பகுதியில் டாக்டர் ராமதாஸ் கல்வி அறக்கட்டளை வளாகத்தில் உள்ள சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஆண்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திரைப்பட இயக்குநரும், நடிகருமான இளவரசு கலந்து கொண்டார். பல்கலைக்கழக அளவிலானத் தேர்வில் முதல் மூன்று இடம் பிடித்த மாணவ, மாணவிகள் பரிசுகள் வழங்கினார்.
மேலும், விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார். அப்போது பேசிய அவர், ”இது ஒரு புதிய அனுபவம் மரங்களுக்குள் நடுவில் வித்தியாசமாக ஒரு கல்லூரியின் ஆண்டு விழா. இதுவரை நான் எங்கும் அனுபவித்தது இல்லை. டாக்டர் ராமதாஸ் சமூக நீதி, மரம் நடுவது போன்ற சுயமான சிந்தனைக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்தச் சூழலை உருவாக்கி உள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ’முத்துக்கு முத்தாக’ படத்தில் ஐந்து மகன்களால் கைவிடப்பட்டு நானும் என் மனைவியாக நடித்த சரண்யாவும் விஷம் குடித்து இறப்பது போன்ற காட்சியைப் பார்த்து, டாக்டர் ராமதாஸ் முக நூலில் கருத்து தெரிவித்திருந்தார். அவரை நான் சந்திக்க முயன்றபோது, அவரே என்னைத் தொடர்பு கொண்டு இது போன்ற தாய், தந்தை பற்றிய படங்களை தொடர்ந்து எடுக்க வேண்டும் என வாழ்த்தினார்.
மாணவ மாணவிகளுக்கு நான் அட்வைஸ் சொல்லப்போவதில்லை. நன்றாக படியுங்கள் எனவும் சொல்லப்போவதும் இல்லை. ஒரு சமூகத்தின் தொடக்கம், குடும்பம் தான். மாணவர்கள் அனைவரும் பெற்றோரிடம் நண்பர்களைப் போல பழக வேண்டும்.நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள் என்பதை தாய், தந்தையரிடம் சொல்லி விட்டு செய்து பாருங்கள். அது சிறப்பாக வரும். தற்போது கோவையில் பஸ் ஓட்டுநராக இருக்கும் பெண் ஒருவர் பிரபலமாகி வருகிறார்.
பி.பார்ம் படித்த நிலையிலும் அவர் ஓட்டுநராக இருப்பதையே விரும்புகிறார். ஏனெனில் அவரது தந்தை வீடு வீடாகச் சென்று கேஸ் சிலிண்டர் விநியோகம் செய்தவர். வறுமையிலும் எனக்கும், எனது தங்கைக்கும் உணவளித்து விட்டு தாய், தந்தை இருவரும் பட்டினியாக இருப்பார்கள் என அந்தப் பெண் கூறியது என் கண்களை கலங்க வைத்தது.
மேலும் தனக்கு ஓட்டுநர் வேலை தான் பிடித்துள்ளது எனக் கூறி கமிஷனரை பார்க்கச்செல்லும்போதும் காக்கி சட்டையுடன் சென்ற நிகழ்வு, அவருக்கு காக்கி சட்டை மீது எந்த அளவுக்கு ஈர்ப்பு இருந்தது என்பது தெரிந்தது. உங்களுக்கு எந்த துறையில் ஈர்ப்பு உள்ளதோ அந்தத் துறையில் சாதனை செய்ய வேண்டும். தாய், தந்தை கஷ்டத்தை புரிந்துகொண்டால் வாழ்க்கையில் நீங்கள் தோற்க மாட்டீர்கள்.
நீங்கள் கட்டுப்பாடுடன் லட்சியங்களை அடைய முயல வேண்டும். நான் தகப்பனான பின்பு தான் என் தகப்பனார் சொன்னது புரிந்தது. எனவே, லட்சியங்களை சமூக ரீதியாக வெற்றி கொள்ள வேண்டும்” என்று கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் கல்லூரியின் முதல்வர், நிர்வாக அலுவலர், பேராசிரியர்கள், துணை பேராசிரியர்கள், பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: கோவையின் ரூட்டு தலைவி.. பேருந்து ஓட்டும் ஷர்மிளா!