விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த காவேரிபாக்கத்தில் வசித்த ராஜ் என்பவர் தனது மனைவி கலைச்செல்வி, இளைய மகன் கவுதமனுடன் ஏசி பொருத்தப்பட்ட அறையில் மே. 14ஆம் தேதி உறங்கியுள்ளார். அப்போது ஏற்பட்ட ஏசியில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று பேரும் உயிரிழந்தனர். இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மூன்று பேரின் சடலங்களையும் மீட்டு உடற்கூறு ஆய்விற்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஏசி மின்கசிவால் ஏற்பட்ட தீ விபத்தே உயிரிழப்புக்கு காரணம் என முதலில் கூறப்பட்டது. ஆனால் ராஜின் உடலில் இருந்து வழிந்த ரத்தம் போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. தீவிபத்தில் சிக்கி உடல் கருகி உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், அவரது உடலில் இருந்து ரத்தம் வழிந்தது எப்படி என்று காவலர்களுக்கு கேள்வி எழுந்தது. மேலும் அறைக்கு அருகில் கிடந்த காலி பெட்ரோல் கேன், காவல்துறையினரின் சந்தேகத்தை தீவிரப்படுத்தியது.
அதாவது உயிரிழந்த ராஜிக்கு அதிக சொத்துகள் இருப்பதும், முத்த மகன் கோவர்த்தனனை விட இரண்டாவது மகனான கவுதமன் மீது அதிக பாசமும், அக்கறையும் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து காவல்துறையினருக்கு மூத்த மகனான கோவர்த்தன் மீது சந்தேகம் எழுந்தது. அவரை பிடித்து விசாரித்ததில் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார். தொடர்ந்து விசாரணை நடத்தியதில் மனைவியுடன் சேர்ந்து மூன்று பேரையும் கொலை செய்ததை அவர் ஒப்புக் கொண்டார்.
அதாவது சம்பவம் நடந்த அன்று இரவு, மூன்று பேரும் ஒரே அறையில் தூங்கி கொண்டிருந்ததை அறிந்து பெட்ரோலை ஊற்றி எரித்து கொலைச் செய்ய முயன்றுள்ளார். அப்போது அவர்கள் மூன்று பேர் மீதும் தீப்பற்றி எரிந்தபோது அவர்கள் காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்... என்று கூச்சலிட்டுள்ளனர்.
சத்தம் கேட்டால் வெளியில் தெரிந்து விடும் என்பதற்காக தீயை அணைத்து விட்டு மூன்று பேரையும் வெட்டி கொலைச் செய்துள்ளார். இதற்கு அவரது மனைவியான காய்த்ரியும் உடந்தையாக இருந்துள்ளார். சொத்தில் பங்கு கிடைக்காது என்பதற்காகவே இதுபோன்று திட்டம் தீட்டி கொலை செய்ததாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.