விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட முத்தம்பாளையம் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட டாஸ்மாக் மதுபான கடை இயங்கி வருகிறது. இந்த டாஸ்மாக் கடையில் நேற்று (ஜனவரி 17) காணும் பொங்கல் திருநாளை முன்னிட்டு அந்த கிராமத்தை சேர்ந்த சில இளைஞர்கள் மது வாங்கினர்.
அப்போது, சீல் பிரிக்கப்படாத மதுபாட்டிலின் உள்ளே கரப்பான் பூச்சி இருப்பதை கண்ட இளைஞர் ஒருவர் கடை விற்பனையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வேறு மதுபாட்டிலை தருமாறு கேட்டுள்ளார். ஆனால், விற்பனையாளர்கள் முறையான விளக்கம் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த அந்த இளைஞர் மதுபாட்டிலில் கரப்பான் பூச்சி இருப்பத்தை வீடியோவாக பதிவு செய்து அதை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த வீடியோ வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதுபோன்ற கவனக்குறைவினால் உயிரிழப்புகள் ஏற்படக்கூடும். ஆகவே, தமிழ்நாடு அரசு உடனடியாக இதை கருத்தில் கொண்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார் அந்த மதுப்பிரியர்.
இதையும் படிங்க: இளைஞர்களுக்கு மாரடைப்பு மரணங்கள் ஏற்படுகின்றன - அமைச்சர் ம. சுப்ரமணியம்