சென்னை: மாநிலத் தலைவர் பதவியை பெண்ணுக்கு விட்டுக் கொடுப்பீர்களா? என திமுகவுக்கு தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பி உள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், ஆங்கில புத்தாண்டு அனைவருக்கும் மகிழ்ச்சியும் செல்வத்தையும் தர வேண்டும் என இறைவனை பிராத்திக்கிறேன். டெல்லியில் கட்சி தலைவர் நட்டாவை சந்தித்துப் பேச உள்ளேன். தமிழக அரசியல் சூழ்நிலைகள் குறித்து அவரிடம் பேச உள்ளேன். அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை வழக்கு குறித்தும் அவரிடம் பேசுவேன்.
பெண்களை லட்சாதிபதி ஆக்குகின்றோம்: தமிழகத்தில் பெண்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பது போலவும் பெண்கள் முன்னேற்றத்திற்கு தாம் மட்டுமே முழு பொறுப்பு என்பது போல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசி இருக்கிறார். தமிழ்நாட்டில் பல ஆண்டுகளுக்கு முன்பே பெண்கள் முன்னேற்றம் படிப்படியாக நிகழ்ந்திருக்கிறது. பெண்கள் விடுதலைக்கு பாரதியார் வித்திட்டார். காமராஜர் பெண்களுக்கு கல்வி கண் கொடுத்தார். பாஜக மேலிடம் வரும் 10 நாட்களில் அனைத்து மாநிலங்களிலும் புதிய மாநில தலைவர்களை நியமிக்க உள்ளனர். அந்தமான்- நிகோபார் மாநில தலைவரை தேர்ந்து எடுப்பதற்கான சிறப்பு அதிகாரியாக நான் செல்கிறேன்.
பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் பெண்களை லட்சதிபதியாக்கி கொண்டு இருக்கிறோம். ஆனால் தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானக்கடைகளால் அனைத்து மகளிரும் கண்ணீர் விட்டு கொண்டு இருக்கிறார்கள். டாஸ்மாக்கை மூடுவோம் என வாக்குறுதி கொடுத்து திமுக ஆட்சிக்கு வந்தது. ஆனால் டாஸ்மாக் மதுக்கடைகளை மூடுவது உள்ளிட்ட எந்த வாக்குறுதியும் அவர்கள் நிறைவேற்றவில்லை. ஆனால் விளம்பரம் மட்டும் செய்து கொண்டிருக்கிறார்கள். திராவிடம் என்று கூறி விட்டு பா.ஜ.க. மறைமுகமாக பிரித்தாளுவதாக சொல்லுகின்றனர்.
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை: பெண்கள் வீட்டிற்குள் இருக்க வேண்டும் என்று பா.ஜ.க நினைப்பதாக கூறுகின்றனர். பா.ஜ.க ஆட்சியில் நிதி அமைச்சர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் பெண்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பா.ஜ.க. மானில தலைவராக நான் பொறுப்பு வகித்திருக்கின்றேன். திமுகவில் பெண் ஒருவரை மாநில தலைவராக நியமிப்பார்களா?
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மக்கள் நன்றாக புரிந்து வைத்து இருக்கிறார்கள். தமிழகத்தில் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை. நீதிமன்றம் தலையிட்டு பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியதாக உள்ளது. தமிழக காவல் துறை, அரசு மீது நம்பிக்கை இல்லாமல் நீதிமன்றம் தலையிட கூடிய மோசமான நிலைமையில் தமிழகத்தில் பெண்கள் நிலை உள்ளது.
அணணா பல்கலைக்கழகத்தில் பாலியல் வன்கொடுமையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நபர் சார் என குறிப்பிட்டது யாரை என்று கேட்டால் ஆளும் கட்சியினருக்கு கோபம் வந்து விடுகிறது. எந்த ஒரு பெண் குழந்தையும் இது போல பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகக் கூடாது. தமிழகத்தில் இதுபோன்ற சம்பவங்கள் தடுக்கப்பட வேண்டும்.
ஆளும் கூட்டணி கட்சியினர் வாய்மூடி இருப்பது ஏன்?: திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் கல்வி நிலையங்களில் பெண்கள் பாலியல் வன்கொடுமை போன்றவற்றில் பாதிக்கப்படும் போது அது குறித்து எந்தவித கருத்தும் சொல்லவில்லை. பெண் குழந்தைகள் பாதிக்கப்படுவதை பற்றி கவலைப்படாமல் திமுக கூட்டணி கட்சிகள் ஒட்டு கேட்டு மட்டும் செல்கிறார்கள். உள்துறை அமைச்சர் அமித்ஷாவை எதிர்த்து விசிக தலைவர் திருமாவளவன் போராட்டம் நடத்துகிறார். அம்பேத்கருக்கு பாஜக எவ்வளவு பெருமை சேர்த்து உள்ளோம் என்பதையும் அவரை காங்கிரஸ் எவ்வளவு சிறுமைப்படுத்தி உள்ளது என்பதையும் திருமாவளவன் தெரிந்து கொள்ள வேண்டும்.
பிரதமர் நரேந்திர மோடியின் ஆழ் மனத்தில் தமிழ் மீது பற்று கொண்டவராக உள்ளார். மத்திய அமைச்சர்களை தமிழக அமைச்சர்கள் சென்று சந்திக்கின்றனர். கோரிக்கைகள் நிறைவேற்றப்படுகின்றன. ஆனால் கீறல் விழுந்த ரிக்கார்டு போல மத்திய அரசு ஒத்துழைக்கவில்லை என்று சொல்லி கொண்டு இருக்கிறார்கள்.
எந்த திட்டத்துக்கு மத்திய அரசு நிதி தந்ததோ அந்த திட்டத்திற்கு மட்டும் அரசு செலவிட வேண்டும். மழை நீர் கால்வாய்களுக்கான நிதி உதவி ரூ4 ஆயிரம் கோடியை என்ன செய்தீர்கள்? சிஏஜி அறிக்கையில் செலவு செய்யாமல் நிதி மத்திய அரசுக்கு திருப்பி அனுப்பப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது. பெண்கள் துறைக்கான நிதி செலவிடப்படவில்லை. தமிழகத்துக்கு மத்திய அரசு ஒத்துழைப்பு வழங்கி கொண்டு இருக்கிறது,"என்று கூறினார்.