இந்திய திருநாட்டின் 74ஆவது குடியரசு தினம் (ஜன.26) நாடு முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது. தலைநகர் புதுடெல்லியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தேசியக் கொடி ஏற்றிவைத்து முப்படைகளின் ராணுவ மரியாதையினை ஏற்றுக்கொண்டார்.
குடியரசு தினத்தை முன்னிட்டு, டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின அணி வகுப்பில் முப்படைகளான, மத்திய ஆயுதப் படைகள், துணை ராணுவம் மற்றும் காவல் படைகள் உள்ளிட்டப் பல்வேறு பிரிவுகளின் அணிவகுப்புகள் நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது. நேற்று நடைபெற்ற அணிவகுப்பில் இந்திய கடற்படையைச் சேர்ந்த இசைக்குழு பங்கேற்று சிறப்பித்தது. இந்த இசைக் குழுவிற்கு தலைவகித்து நடத்தி சென்றார், கள்ளக்குறிச்சி மாவட்டம் இருந்தை கிராமத்தைச் சேர்ந்த இந்திய கடற்படை வீரர் அந்தோணி ராஜ்.
தற்போது இவர் மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் உள்ள ‘ஐஎன்எஸ் குஞ்சாலி’ என்ற இசை பயிற்சிப் பள்ளியில் ‘மாஸ்டர் சீஃப் பெட்டி என்கிற உயர் பதவியில் பணிபுரிந்து வருகிறார். கடந்த 1994ஆம் ஆண்டு இந்தியக் கடற்படையில் பணியில் சேர்ந்த அந்தோணி ராஜ், 1995ஆம் ஆண்டு கார்னெட் வாத்திய இசைக் கலைஞராக தன்னை வளர்த்துக்கொண்டார்.
பின்னர், படிப்படியாக உயர்ந்து தெற்கு, கிழக்கு மற்றும் மேற்கு பிராந்தியத்தில் டிரம் பேணட் வாத்திய இசைக்குழுவின் மேஜராக பணியமர்த்தப்பட்டார். நேற்று நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பில் இந்திய கடற்படையின் சார்பில், 188 கடற்படை இசை கலைஞர்கள் பங்கேற்ற அணிவகுப்பின்போது, கடற்படை இசைக்குழுவை குடியரசுத் தலைவரை கடந்து செல்லும்போது, கடற்படையின் புதிய பாடல் இசைக்கப்பட்டது.
இது குறித்து அந்தோணிராஜ் தன்னுடைய அனுபவங்களை கூறும்போது, 'என்னுடைய பூர்வீகம், கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த இருந்தை கிராமம். என் பெற்றோர் விவசாயம் செய்து தான் என்னை வளர்த்தனர். மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் இருந்து தான் நான் வளர்ந்தேன். என்னுடைய பள்ளி படிப்பானது உளுந்தூர்பேட்டையிலும், அதன் பின்னர் இசையின் மீது கொண்ட ஆர்வத்தின் காரணமாக எனக்கு ஓய்வுபெற்ற தமிழக காவல்துறையைச் சேர்ந்த ஆய்வாளர் தேவசகாயம் இசையை கற்றுக் கொடுத்தார்.
அவர்தான் என்னை கடற்படையில் சேர ஊக்கப்படுத்தினார். கடற்படையின் இசைப்பிரிவில் சேர அதற்கான தகுதிகள் உள்ளன என்று இந்திய ராணுவத்தில் கடற்படை பேண்ட் வாத்தியக்குழு பணியில் சேர்வதற்கான விண்ணப்பத்தை என் சார்பில் அவர் விண்ணப்பித்தார். மேலும் எனக்கு முறையாக பேண்ட் வாசிப்பது எப்படி என்று கற்றுக் கொடுத்தவர், பால் நடராஜ்.
என்னுடைய குடும்பமானது திண்டுக்கல் மாவட்டம், பஞ்சம்பட்டி பகுதியில் வசித்து வருகின்றனர். எனக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். என் மூத்த மகள் வழக்கறிஞர் படிப்பையும் இரண்டாவது மகள் பத்தாம் வகுப்பு படிப்பையும் தொடர்ந்து வருகின்றனர். நான் இந்திய கடலோர காவல் படையில் 29 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறேன்.
முதன்முறையாக தமிழ்நாட்டில் இருந்து இந்திய குடியரசு தின விழாவில் முப்படைகளின் தளபதியான குடியரசுத் தலைவர் முன்பு இந்திய கடலோர காவல் படை அணிவிப்பை தலைமை ஏற்று நடத்திச் செல்லும் பொறுப்பு எனக்கு கிடைத்ததில் நான் மிகவும் மகிழ்ச்சி கொள்கிறேன். நான் இந்த நிலையை அடைய காரணமாக இருந்த என் பெற்றோர். எனக்கு இசை கற்றுக் கொடுத்த என்னுடைய ஆசிரியர்களுக்கு நான் இத்தருணத்தில் நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: குடியரசு தின விழாவில் டாஸ்மாக்கிற்கு அதிக வருவாய் ஈட்டியதைப் பாராட்டி சான்றிதழ்; சர்ச்சையானதால் வாபஸ்