விழுப்புரம் மாவட்டம் செஞ்சி மேல்மலையனூர் பகுதியைச் சேர்ந்தவர் தனசேகர், வடபாலை பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன். இவர்கள் இருவரும் கோயில்களில் திருஷ்டி, தோஷம் கழிக்க பயன்படும் கருடன்-கிழங்கு பறித்து வியாபாரம் செய்துவந்தார்கள். இந்தக் கிழங்குகளை இருவரும் மலையனூர் ஏரிப் பகுதிகளில் பறிப்பது வழக்கம்.
இந்நிலையில், ஏரியில் பறித்த கிழங்கை பகிர்ந்துகொள்ளும்போது இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த தனசேகர் அருகிலிருந்த கற்களை எடுத்து முருகேசனை தாக்கியுள்ளார். முருகேசனின் மனைவி தடுத்தும் தனசேகர் தொடர் தாக்குதலில் ஈடுபட்டுள்ளார். இதில் முருகேசன் சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்துள்ளார்.
பின்னர், சிகிச்சைக்காக செஞ்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முருகேசன் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த வளத்தி காவல் துறையினர் தனசேகரனை கைது செய்தனர். விசாரணையில் கருடன் கிழங்கை இருவரும் மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் பறித்து விற்று, அதில் வரும் வருமானத்தை பிரித்து கொள்வதாகவும் இதில் நூறு ரூபாய் பணத்தை தன்னிடம் தராமல் முருகேசன் அலைக்கழித்ததால் கொலை செய்ததாகவும் காவல் துறையினரிடம் வாக்குமூலம் அளித்துள்ள சம்பவம் அப்பகுதியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.