விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே திருநாவலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவர் தனக்குச் சொந்தமான நான்கு ஏக்கர் விவசாய நிலத்தில் நெல் பயிருடுவதற்காக பண்ருட்டியில் உள்ள உதவி வேளாண்மை அலுவலகத்தில் உள்ள விதைக் கிடங்கில் 80 கிலோ அளவுள்ள என்.எல்.ஆர். 34449 என்ற புதிய ரக நெல் விதைகளை வாங்கி நேரடி நெல் விதைப்புசெய்தார்.
இந்த நெல் விதைக்கப்பட்டு ஆறு தினங்கள் கடந்த பின்பும் முளைக்காமல் இருந்துள்ளது. இது குறித்து வேளாண்மை அலுவலரை அணுகியபோது வயலில் உள்ள நீரை வடிகட்டி உலர வைத்தால் நெல் முளைப்பு வரும் என கூறியுள்ளார். ஆனால் பதினைந்து நாள்களாகியும் நெல் முளைக்காமல் இருந்ததால் அதிர்ச்சியடைந்த விவசாயி மீண்டும் வேளாண் அலுவலரை நாடியுள்ளார். அப்போது அந்த அலுவலர் அலட்சியமாக மீண்டும் வேறு ரக நெல் அளிக்கின்றோம் நடவு செய்யுங்கள் எனக் கூறியுள்ளார்.
எனவே தரமற்ற நெல் விதைகளை கொடுத்து ஏமாற்றிய வேளாண்மை அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுத்து அதற்கான இழப்பீடு வழங்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட விவசாயி தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கைவிடுத்துள்ளார். அரசு வேளாண்மை துறை அலுவலரால் சான்றிடப்பட்டு விற்பனை செய்யப்பட்ட நெல் முளைக்காமல் இருப்பது அப்பகுதி விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.