கள்ளக்குறிச்சி ஏமப்பேர் கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் வினோத். இவருடைய மகன் வர்னீஷ்வரன் (7), கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி ஒன்றில் ஒன்றாம் வகுப்பு படித்துவந்தான். வினோத்தின் உறவினர் ரமேஷ் என்பவருக்கு சில தினங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. கள்ளக்குறிச்சியில் உள்ள ரமேஷின் வீட்டில் நடைபெறவிருந்த வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு வினோத் தன் குடும்பத்தோடு சென்றார்.
நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் இரும்புக் குழாயிலான பந்தல் அமைத்து, அதில் அலங்கார சீரியல் செட் விளக்குகள் பொருத்தப்பட்டிருந்தது. இந்த அலங்கார சீரியல் செட் விளக்குகளிலிருந்த மின்வட வயர்கள் இரும்புக் குழாயில் உரசியதால் அதிலும் மின்சாரம் பாய்ந்திருந்தது. இதனையறியாமல் பந்தலின் உள்புறமாக விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் வர்னீஷ்வரன், மின்சாரம் பாய்ந்துகொண்டிருந்த இரும்புக் குழாயை தொட்ட வேகத்தில் சரிந்து விழுந்துள்ளான்.
![7 years old boy died electric shock](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/4464715_bga.png)
இதைக் கண்டு அலறியடித்து ஓடிய உறவினர்கள் உடனடியாக சிறுவனை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். ஆனால், சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டார் என மருத்துவர்கள் கூறிவிட்டனர். சிறுவன் இறந்ததை தாங்க முடியாத சிறுவனின் பெற்றோர், உறவினர்கள் கதறி அழுதனர். இந்தச் சம்பவம் கள்ளக்குறிச்சி ஏமப்பேர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.