விழுப்புரம் மாவட்டம், செஞ்சி விழுப்புரம் சாலை விநாயகபுரம் பகுதியில் வசிப்பவர் சகாயராஜ்- வசந்தி தம்பதியர். வழக்கம் போல் இரவில் வீட்டை பூட்டிவிட்டு சகாயராஜ், அவரது மனைவி வசந்தி, மகள் ஆகியோர் தூங்கச் சென்றனர். இரவு ஒரு மணியளவில், சகாயராஜின் மாடி வீட்டை அடையாளம் தெரியாத கொள்ளையர்கள் உடைக்க முயன்றுள்ளனர்.
மாடி வீட்டில் சார்லட் (58) என்ற பெண் வசிந்து வருகிறார். வீட்டினுள் தூங்கிக்கொண்டிருந்த சார்லட், சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்து கீழ் வீட்டில் வசிக்கும் வீட்டு உரிமையாளர் வசந்திக்கு பல முறை செல்போனில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க முயற்சித்துள்ளார். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை. சிறிது நேரத்தில் கொள்ளை கும்பல் கீழே உள்ள சகாயராஜ் வீட்டுக்குச் சென்று கதவைத் தட்டியுள்ளனர். கொள்ளை கும்பல் குறித்து அறியாத சகாயராஜ், கதவை திறந்ததும் முகமூடி அணிந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் உள்ளே புகுந்து, சகாயராஜை தாக்கி கத்தியால் குத்த முயன்றனர். அப்போது அவரது மனைவி, தனது கணவர் தாக்கப்படுவதைக் கண்டு தடுக்க முயன்றார்.
கணவன், மனைவி இருவரையும் தாக்கிய கும்பல், வீட்டிலிருந்த தங்க நகைகள், தாலி சரடு உள்ளிட்ட 50 சவரன் எடையுள்ள நகைகள், இரண்டு கிலோ வெள்ளி, 10 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து விட்டு அங்கிருந்து தப்பியோடினர். இச்சம்பவம் குறித்து வீட்டின் உரிமையாளர் அளித்த புகாரின்பேரில், செஞ்சி காவல்துறையினர் சம்பவ இடத்தில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
விசாரணையில், ஐந்து பேர் கொண்ட அடையாளம் தெரியாத கும்பல் முகமூடி அணிந்தும், கையில் இரும்புக் கம்பி, ஸ்க்ரூட்ரைவர், சிறிய பேனா கத்தி ஆகியவற்றை வைத்து உள்ளே நுழைந்ததோடு, கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டிவிட்டு சென்றதாகவும், கும்பலில் ஒருவர் இந்தியில் பேசியதாகவும், வீட்டின் உரிமையாளர் சகாயராஜ் காவல்துறையினரிடம் தெரிவித்தார். கொள்ளை குறித்து தகவலறிந்த விழுப்புரம் மாவட்ட கண்காணிப்பாளர் நேரில் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து அடையாளம் தெரியாத கொள்ளை கும்பலை பிடிக்கும் முயற்சியில் செஞ்சி காவல்துறையினர் ஈடுபட்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: 30 வயதில் கருவுறுதல் பிரச்னையா? வந்தாச்சு தீர்வு!