விழுப்புரம்: கடந்த திங்கட்கிழமை முதல் இன்று (ஏப்ரல் 1) வரை செஞ்சி கல்வி மாவட்டத்துக்கு உட்பட்ட அரசு, தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் உட்பட 75 பள்ளிகளுக்கு பத்தாம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான திருப்புதல் தேர்வு நடைபெற்று வருகிறது.
இத்தேர்வுக்கான வினாத்தாள், பண்ருட்டி பகுதியில் இருந்து பிரிண்ட் செய்யப்பட்டு விழுப்புரம் மாவட்டம், முழுக்க விநியோகம் செய்யப்படுவதாகவும், அவ்வாறு விநியோகத்தில் ஏற்பட்ட பிரச்னையால் நேற்று (மார்ச் 31) இரண்டு மணி நேரம் தாமதமாக வினாத்தாள் வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
அதேபோல் இன்று (ஏப்ரல் 1) நடைபெற்ற தேர்வுக்கு 10 மணி வரையிலும் வினாத்தாள் வராததால் மாணவர்கள் ஏமாற்றத்துடன் காத்துக்கொண்டிருந்த நிலையில், செஞ்சி கல்வி மாவட்ட அலுவலர்கள் அந்தந்த பள்ளிகளுக்கு மெயில் மூலம் வினாத்தாள்களை அனுப்பி வைத்து, இதற்காக அந்தந்த பள்ளியில் பிரிண்ட் எடுத்து தேர்வு நடத்த உத்தரவிட்டனர்.
அனைத்துப் பள்ளிகளுக்கும் மெயில் மூலம் வினாத்தாள் அனுப்பப்பட்டுள்ளதால் வெளியில் சென்று பிரின்ட் எடுக்கும்போது, இந்த வினாத்தாள் ஆனது வெளியாக வாய்ப்புள்ளதாகவும், இதனால் பல குழப்பங்கள் ஏற்படும் எனவும் ஆசிரியர் தரப்பில் தெரிவித்துள்ளனர்.
கிராமப்புறத்தில் உள்ள பள்ளிகளில் பிரின்ட் எடுக்க வசதி இல்லாததால், அங்கிருந்து செஞ்சி சென்று பிரின்ட் எடுத்து வருவதற்கு ஒரு மணி நேரம் மேல் ஆவதாகவும், ஆசிரியர்கள் தெரிவித்தனர். இன்று காலை 10 மணிக்கு நடைபெற இருக்கின்ற தேர்வுக்கு, 10 மணிக்கு இமெயில் மூலம் வினாத்தாள் அனுப்பப்பட்டு, பின்பு அதை பிரின்ட் எடுத்து தேர்வு எழுதுவதற்கு நேரம் இல்லை எனவும் ஆசிரியர்கள் புலம்பினர்.
பின்பு 10 மணிக்கு நடக்கக்கூடிய தேர்வு வினாத்தாள் தாமதமானதால் ஒரு சில பள்ளிகளில் 10.30 மணி அளவிலும் மற்ற பள்ளிகளில் 10.40 மணி அளவிலும் தேர்வு தாமதமாக நடைபெற்றது. இதனால் அந்தந்த நேரத்துக்கு ஏற்றதுபோல் கூடுதலாக நேரம் ஒதுக்கப்படும் எனவும் ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: 'என் மகளை மனைவியிடம் இருந்து மீட்டுத்தாருங்கள்' - நடிகர் தாடி பாலாஜி புகார்!