விழுப்புரம் : கண்டமங்கலத்தில் வள்ளலார் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இரண்டு நாள்கள் விடுமுறை அடுத்து நேற்று (செப்.13) 12ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன.
இப்பள்ளியின் ஆய்வகம் விழுப்புரம், நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம் காரணமாக இடிக்கப்படவுள்ளது. இதனால் ஆய்வகத்தை இடமாற்ற திட்டமிட்ட பள்ளி நிர்வாகம், அங்கிருந்த பொருட்களை இடமாற்றம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், 12ஆம் வகுப்பு பயிலும் மாணவிகள் பாமா, ஆதிஷா, ஜனனி, நித்யா ஆகியோர் தலைமை ஆசிரியரின் அறிவுறுத்தலின் பேரில் ஆய்வகத்தில் இருந்த பொருள்களை வெளியேற்றி கொண்டிருந்தனர்.
அப்போது ஆய்வகத்தில் இருந்த நைட்ரிக் ஆக்ஸைடு, சல்பர் ஆசிட் மீது கல் பட்டு வெடித்ததில் நான்கு மாணவிகளும் காயமடைந்தனர். இதில் பாமாவுக்கு கண்ணில் காயம் ஏற்பட்டு புதுச்சேரி தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
மற்ற மூவரும் லேசான காயத்துடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க : சம்பள பணம் பிரிப்பதில் தகராறு - சமையல் தொழிலாளி கொலை