விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அடுத்த நாவற்குளம் பகுதியைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவி ஒருவர் தன்னுடைய காதலன் கூறிய ஆசை வார்த்தைகளைக் கேட்டு சேதராப்பட்டு பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்குச் சென்றார். அங்கு அந்த மாணவிக்கு அவரது காதலன் நரேஷ்(19) என்பவர் குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்தார்.
அதுமட்டுமின்றி அவரது நண்பர்களான வானூர் விநாயகபுரத்தைச் சேர்ந்த ராஜா என்கிற ராக்கெட் ராஜா (32), மொரட்டாண்டியைச் சேர்ந்த சூர்யா(19) ஆகிய இருவரும் அந்த மாணவியை பாலியல் வன்கொடுமை செய்திருக்கின்றனர்.
இதற்கிடையே மாணவி மாயமானதால் ஆரோவில் காவல் நிலையத்தில் மாணவியின் தாயார் புகார் கொடுத்திருந்தார். இந்த நிலையில் நேற்றிரவு அந்த மாணவி தன்னுடைய வீட்டிற்கு வந்துள்ளார். சுயநினைவில்லாமல் இருந்த அந்த மாணவியை உடனடியாக அவரது பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அப்போது அந்த மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் நரேஷ் உள்ளிட்ட மூன்று பேர், மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தது உறுதியானதால் அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.