விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் உள்ள இடையர் சந்து பகுதியில் வசித்துவருபவர் விவசாயி ரமேஷ். இவர் இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக தனது சொந்தக் கிராமத்திற்கு குடும்பத்தினருடன் சென்றுள்ளார்.
இந்த நிலையில், இன்று காலை அப்பகுதி மக்கள் ரமேஷ் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அவர்களுக்கு தகவல் அளித்துள்ளனர். பிறகு ரமேஷ், அவரது மனைவி விஜயா விரைந்துவந்து பார்த்தபோது கதவு திறந்து காணப்பட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதையடுத்து உள்ளே சென்று பார்த்தபோது வீட்டினுள் இருந்த பீரோக்கள் உடைக்கப்பட்டு அதிலிருந்த 20 பவுன் தங்க நகைகள், 50 ஆயிரம் ரூபாய் பணத்தை அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.
ரமேஷ் வீட்டில் நகை, பணத்தை திருடிவிட்டு அவரது வீட்டின் அருகே உள்ள ஜெயபிரகாஷ் என்பவரது வீட்டின் முன்பு நிறுத்திவைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தையும் திருடர்கள் திருடி தப்பிச் சென்றுள்ளனர்.
இது குறித்து தகவலறிந்து கள்ளக்குறிச்சி காவல் துறையினர் குற்றப் பிரிவு அலுவலர்களுடன் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். தொடரும் திருட்டு சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவிவருகிறது.
மேலும், திருட்டுக்குப் பயன்படுத்திய கத்தி போன்ற ஆயுதங்களை திருடர்கள் வீட்டிலேயே விட்டுவிட்டுச் சென்றுள்ளனர். கடந்த வாரம் இதே தெருவில் ஒரு இருசக்கர வாகனம் திருடுபோன நிலையில், தற்போது வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் தங்க நகைகள் திருடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.