கள்ளக்குறிச்சி: திருக்கோவிலூர் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட மண்டபம் பகுதியில் கை மற்றும் கழுத்துப் பகுதியில் காயங்களுடன் பள்ளி மாணவன் ஒருவர் இறந்து கிடப்பதாக திருக்கோவிலூர் போலீசாருக்கு இன்று (மே15) அதிகாலை தகவல் கிடைத்தது.
இந்தத் தகவலின் பேரில் அங்கு வந்த போலீசார், உயிரிழந்த நிலையில் இருந்த பள்ளி மாணவனின் உடலை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு உடற்கூராய்வு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
அதன் பின்னர், போலீசார் நடத்திய விசாரணையில்; உயிரிழந்த மாணவர் திருக்கோவிலூர் அடுத்த கீரனூர் கிராமத்தை சேர்ந்த சக்கரவர்த்தி என்பவரது மகன் கோகுல் வயது 17 என்பதும், கொலைசெய்யப்பட்ட இளைஞர் தனியார் பள்ளி ஒன்றில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்ததும் தெரியவந்தது.
இந்நிலையில், கொல்லப்பட்ட கோகுலை அவரது நண்பர்கள் சிலர் நேற்று மாலை வீட்டில் இருந்து அழைத்து சென்றதாகவும், மீண்டும் வீடு திரும்பாத நிலையில் கோகுல் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார் என்பதும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, கோகுல் நேற்று மாலை யார் யாருடன் சென்றான், எதற்காக கொலை செய்யப்பட்டார் என்பது குறித்து திருக்கோவிலூர் காவலர்கள் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 17 வயது பள்ளி மாணவன் கொலை செய்யப்பட்டது இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:ஜெயக்குமாரின் மருமகன் திருமண மண்டபத்தில் லிஃப்ட் விபத்து - சிறுவன் உயிரிழப்பு