வேலூர் மாவட்டம் லத்தேரியை அடுத்த ராஜா தோப்பு அணை நேற்று தனது முழுக் கொள்ளளவான 20 மில்லியன் கனஅடியை எட்டியது. இதனைக் காண பொதுமக்கள் ஆர்வத்துடன் குவிந்தனர். இந்நிலையில் நேற்று (டிச. 13) பெருமாள் பேட்டை பகுதியைச் சேர்ந்த கட்டட வேலைசெய்யும் மகேந்திரன் (27) என்பவர் அவரது சகோதரர், நண்பர்களுடன் அணையைப் பார்த்துவிட்டு பின்னர் அணையில் குளித்தனர்.
அப்போது, நீச்சலடிக்க முடியாமல் மகேந்திரன் நீரில் மூழ்கியுள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அங்கிருந்தவர்கள் உடனடியாக இது குறித்து லத்தேரி காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த லத்தேரி காவல் துறையினர், காட்பாடி தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் நீரில் மூழ்கிய மகேந்திரனை சடலமாக மீட்டனர்.
பின்னர் இது தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில், மகேந்திரன் நண்பர்களுடன் மது அருந்திவிட்டு குளித்தது தெரியவந்தது.
இதையும் படிங்க: 10 வயது சிறுமிக்கு 56 வயது நபர் கொடுத்த பாலியல் தொல்லை - பாய்ந்தது போக்சோ!