வேலூர்: மருதவல்லி பாளையம் அண்ணாநகரில் எருது விடும் விழா நேற்று முன்தினம் நடந்தது. இந்த விழாவில் 215 காளைகள் பங்கேற்று சீறிப்பாய்ந்தன. காளை மாடு ஓடும் பாதை தவிர இரண்டு பக்கமும் பாதுகாப்புக்காக தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தது. அதை பொருட்படுத்தாமல் தடுப்பின் உள்ளே சில இளைஞர்கள் நின்றுகொண்டு காளை மாட்டை விரட்டி அடித்து கொண்டு இருந்தனர்.
இந்த நிலையல் தடுப்பின் உள்ளே நின்றிருந்த இளைஞர்கள் மீது சீறிவந்த காளை ஒன்று வேகமாக முட்டியதில் 5க்கும் மேற்பட்டவர்கள் நிலைகுலைந்து கீழே விழுந்தனர். இதில் குடியாத்தம் அடுத்த லிங்குன்றம் பகுதியை சேர்ந்த சுரேஷ்(வயது 28) என்பவர் மீது காளை பலமாக முட்டியதில் அவர் நிலைகுலைந்து கீழே விழுந்தார்.
காளை வந்த வேகத்திற்கு அவர் மீது விழுந்து, எழுந்து அவர் மார்பு பகுதியில் பின் பக்க காலில் மிதித்துவிட்டுச் சென்றது. இதனால் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில், தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி சுரேஷ் உயிரிழந்தார்.
எருது விடும் விழாவில் காளை மாடு அதிவேகமாக வந்து மோதிய காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக வேலூர் விரிஞ்சிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: பெண் காவலரிடம் அவதூறு வழக்கு: வேலூர் நீதிமன்றத்தில் முருகன் ஆஜர்!