அரக்கோணம் அடுத்த குருவராஜப்பேட்டை காந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவரும் இவரது மகன் சுந்தரமும் அதே பகுதியில் கிருஷ்ணன் என்பவருக்குச் சொந்தமான நிலத்தில் கருவேல மரங்களை வெட்டச் சென்றுள்ளனர்.
அப்போது, அங்கு வந்த விஜயகுமாரின் அண்ணன் ராமனும், அவருடைய மகன் சக்திவேலும் மரங்களை வெட்டக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஆனால், எதிர்ப்பை மீறி விஜயகுமார் மரத்தை வெட்டியுள்ளார். இதனால் இரு தரப்புக்குமிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது. இதில், ஆத்திரமடைந்த ராமனும், சக்திவேலும் அருகிலிருந்த கட்டைகளை எடுத்து விஜயகுமாரையும், அவரது மகன் சக்திவேலையும் கடுமையாக தாக்கிவிட்டு தப்பியோடினர்.
இதில், விஜயகுமார் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது மகன் சுந்தரம் படுகாயங்களுடன் அலறியதைக் கேட்ட அக்கம் பக்கத்தினர், ஓடிவந்து அவரை மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அரக்கோணம் கிராமிய காவல் துறையிர், உயிரிழந்த விஜயகுமாரின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
விஜயகுமாரை கொலை செய்துவிட்டு தப்பியோடிய தந்தை மகன் இருவரையும் காவல் துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
மரம் வெட்டும் தகராறில் உடன் பிறந்த சகோதரரையே அடித்துக் கொன்ற சம்பவம் அரக்கோணம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபகாலமாக அரக்கோணம் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கொலை, கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்து வருவது பொதுமக்களிடையே கடும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.