வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள கோவிந்தபுரத்தைச் சேர்ந்தவர் ரேணுகா. தாய், தந்தையை, இழந்த ரேணுகா தனது அக்கா வீட்டில் வசித்து, ஆம்பூர் தனியார் காலனி தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த கார் ஓட்டுநர் ஜானகி ராமன் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ரேணுகாவை பின்தொடர்ந்து தனது காதலை ஏற்கும்படி வற்புறுத்தி தற்கொலை செய்துக்கொள்வதாக மிரட்டியுள்ளார்.
இதனைத்தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்த நிலையில், ஜானகி ராமன், ரேணுகாவை திருமணம் செய்துக்கொள்வதாக ஆசை வார்த்தைகளை கூறி, வற்புறுத்தி பலாத்காரம் செய்துள்ளார். இந்நிலையில், கர்ப்பமான ரேணுகா, தான் கர்ப்பமாக இருப்பதாகவும் தன்னை திருமணம் செய்துகொள்ளும்படியும் ஜானகி ராமனிடம் கூறியுள்ளார்.
இதனை ஏற்காத ஜானகி ராமன் ரேணுகாவை திருமணம் செய்துக்கொள்ள மறுத்து, இதற்கு தனது அம்மா சம்மதிக்கமாட்டார் எனவும் தெரிவித்துள்ளார். ஜானகி ராமனை நம்பி ஏமாற்றமடைந்த ரேணுகா, தனது உறவினர்களின் உதவியுடன் ஆம்பூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் ஜனவரி 1ஆம் தேதி புகார் அளித்தார். ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது. மேலும், இதுகுறித்து, காவல்நிலையத்தில் விளக்கம் கேட்டபோது ஜானகி ராமன் முன்னதாகவே முன் ஜாமீன் பெற்றுவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
காதலனும் ஏமாற்றிவிட்டான், சட்டமும் தன்னை கைவிட்டுவிட்டது என மனம் நொந்த நிலையில் இருந்த ரேணுகா, இன்று காலை தனது கர்ப்பத்திற்கு காரணமான ஜானகி ராமன் வீட்டின் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கிராமிய காவல்துறையினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ரேணுகா காவல் ஆய்வாளரின் காலில் விழுந்து உதவி கோரிய சம்பவம் பார்ப்பவரை கண்கலங்க வைத்தது. இதனையடுத்து, ஜானகி ராமன் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் ஆம்பூர் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.