தமிழ்நாடு மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், மகளிர் திட்டம் சார்பில் வேலூர் மாவட்டத்திலுள்ள மகளிர் சுய உதவி குழுக்களுக்கு நுண்கடன் வழங்கும் வங்கிகள், தனியார் வங்கிகள், நுண் நிதி நிறுவனங்கள், வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் சண்முகசுந்தரம் தலைமையில் இன்று (ஜூன். 12) நடைபெற்றது.
கூட்டத்தில், கரோனா ஊரடங்கால் பொதுமக்கள் வேலை இழந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அத்தியாவசியத் தேவைகளுக்காக மகளிர் சுய உதவிக்குழுவினர் கடன் பெற்றுள்ளனர்.
இந்நிலையில், கடன் கொடுத்த நிறுவனங்கள் கடனை திரும்ப கேட்டு வருவதாகவும், மிரட்டல் விடுப்பதாகவும் தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. ஆகையால் இனி வரும் காலங்களில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் கொடுத்த நிறுவனங்கள் கடன் வசூலிக்க ரிசர்வ் வங்கி வகுத்து கொடுத்த நிபந்தனைகளை கடைபிடிக்க வேண்டும்.
மாறாக தொந்தரவு செய்யவோ, தரக் குறைவாக நடத்தவோ, துன்புறுத்தவோ கூடாது. மேலும், அராஜக போக்குடன் செயல்படும் நுண் கடன் நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் எச்சரித்துள்ளார்.