வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வெள்ளக்கல் ஆலமரத்து வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் வீரபத்திரன். இவரது மனைவி சங்கீதா.
திருமணமாகி ஓராண்டு ஆகியுள்ள நிலையில் இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டுள்ளது. வீரபத்திரனுக்கு மது குடிக்கும் பழக்கும் இருந்துள்ளது. வீரபத்திரன் வழக்கம்போல் மே 19ஆம் தேதி குடித்துவிட்டு வந்து மனைவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இந்த நிலையில் மே 20ஆம் தேதி வீட்டின் அருகே உள்ள கிணற்றில் சங்கீதா சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் அவரது உடல் உடற்கூறாய்வுக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
அவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும் கணவரை கைது செய்யக்கோரி காவல் துறையிடம் சங்கீதாவின் உறவினர்கள் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து சங்கீதாவின் தந்தை சொக்கன் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து ஆம்பூர் கிராமிய காவல் துறையினர் வீரபத்திரனை கைது செய்து விசாரித்துவருகின்றனர்.
மேலும், இது தற்கொலையா அல்லது கொலையா என்ற கோணங்களில் காவல் துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்நிலையில், சங்கீதா எழுதி வைத்த கடிதம் ஒன்றை காவல் துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
அதில், "என் கணவர் மது அருந்திவிட்டு வந்து என்னை, 'உன் தாய் வீட்டிற்குச் சென்று நகை, பணம், இருசக்கர வாகனம் வாங்கிவா!' என்று சொல்லி அடித்து சித்ரவதை செய்துவருகிறார்" என குறிப்பிடப்பட்டிருந்தது.