மக்கள் தங்கள் பிரதிநிதிகளை தேர்வு செய்வதற்காக தேர்தல் நடத்தப்படுகிறது. பொதுவாக தேர்தல் என்றாலே அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள், மாணவர்கள் மத்தியில் ஒரு விதமான எதிர்பார்ப்பும் பரபரப்பும் தொற்றிக் கொண்டு ஒரு திருவிழாவைப் போல் நடைபெறும். அதிலும் குறிப்பாக இடைத்தேர்தல் என்றால் சொல்லவே தேவையில்லை பிரமாண்ட திருவிழாவைப் போல் நடைபெறும். அந்த வகையில் தற்போது தமிழ்நாட்டின் வேலூர் மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் திருவிழாவாக களைகட்டத் தொடங்கியுள்ளது.
நாடு முழுவதும் நடைபெற்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 39 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த சூழுலில், பணப்பட்டுவாடா புகார் எழுந்த காரணத்தினால் வேலூர் மக்களவைத் தொகுதிக்கு மட்டும் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வேலூர் மக்களவைத் தேர்தல் ஆகஸ்டு 5ஆம் தேதி நடத்தப்படும் என்று இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது.
வேலூர் தொகுதியை பொறுத்தவரை விஐபி தொகுதியாகவே கருதப்படுகிறது. ஏனெனில் தமிழ்நாட்டின் மிகப்பெரிய கட்சிகளில் ஒன்றான திமுகவின் பொருளாளர் துரைமுருகனின் சொந்த மாவட்டம் என்பதும் இதற்கு காரணம். துரைமுருகனுக்கு கட்சி ரீதியாகவும் அவர் சார்ந்த சமூகம் ரீதியாகவும் வேலூர் மாவட்டத்தில் அதிக செல்வாக்கு இருப்பதால், அதை பயன்படுத்தி தனது மகனை மக்களவை உறுப்பினராக்க துரைமுருகன் திட்டமிட்டார்.
அதன்படி திமுக சார்பில் தனது மகன் கதிர் ஆனந்த்தை களம் இறக்கினார் துரைமுருகன். அதேசமயம் அதிமுக தனது கூட்டணி கட்சியான புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகத்தை வேட்பாளராக நிறுத்தியது. இவர்கள் இருவரும் பண பலம், அரசியல் பலம், ஆள் பலம் என அனைத்திலும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல என்பது ஊர் அறிந்த உண்மை. பல்வேறு கல்வி நிறுவனங்களை நடத்தி வரும் ஏ.சி.சண்முகம் முன்பே மக்களவை உறுப்பினராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் கடந்த 2014ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் இதே வேலூர் தொகுதியில் போட்டியிட்ட ஏ.சி.சண்முகம் அதிமுக வேட்பாளர் செங்குட்டுவனை விட சுமார் 30 ஆயிரம் வாக்குகள் குறைவாக வாங்கி தோல்வியைத் தழுவினார். இந்த தோல்வியை சரி செய்யும் வகையில் தற்போது மீண்டும் வேலூரில் களமிறங்கினார்.
சண்முகத்துக்கு ஆதரவாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், தேமுதிக தலைவர் விஜயகாந்த் மனைவி பிரேமலதா, பாமக நிறுவனர் ராமதாஸ் என கூட்டணி கட்சியில் உள்ள அனைத்து தலைவர்களும் வேலூரில் வந்து பிரச்சாரம் செய்தனர். இதனால் எப்படியும் ஜெயித்து விடலாம் என்று ஏ.சி.சண்முகம் கனவு கோட்டையை கட்டி இருந்தார். ஆனால் தேர்தல் ரத்து அறிவிப்பால் ஒரே நொடியில் அவரது கோட்டை சரிந்தது. இருப்பினும் மனதை தளர விடாமல் தொடர்ந்து உடனடியாக தேர்தல் மீண்டும் அறிவிக்க வேண்டுமென ஏசி சண்முகம் தீவிர முயற்சிகளை மேற்கொண்டுவந்தார்.
அதன்படி தேர்தல் ரத்து செய்யப்பட்ட உடனே டெல்லிக்கு சென்று இந்திய தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்த ஏ.சி.சண்முகம், பிரதமர் மோடி பதவியேற்பு விழாவிலும் கலந்துகொண்டு, ரத்து செய்யப்பட்ட தேர்தலை விரைவாக நடத்த நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தினார்.
இதோடு நின்றுவிடாமல் தேர்தல் எப்போது வேண்டுமானாலும் வைக்கலாம் என்பதால் வேலூர் தொகுதி மக்களின் மனதில் இடம் பிடிப்பதற்காக பிரச்சாரத்தின் போது தான் அளித்த சில வாக்குறுதியை தற்போது இருந்தே நிறைவேற்றும் நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகிறார். அதன்படி கடந்த ஒரு மாதமாக வேலூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களிலும் மருத்துவ முகாம்களை ஏசி சண்முகம் நடத்தி வருகிறார். இதற்கு வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக அமைச்சர் கே.சி வீரமணி பக்கபலமாக இருக்கிறார்.
மக்கள் மனதில் இடம் பிடிக்க வேண்டும் என்பதற்காக ஏ.சி.சண்முகம் இது போன்ற முயற்சிகளை எடுத்து வந்தாலும் கூட ,தேர்தல் வருவதற்கு முன்பாகவே அதாவது ஒரு வருடத்திற்கு முன்பே இது போன்ற நல திட்டங்களை தனது சொந்த செலவில் செய்திருந்தால் உண்மையாகவே அவரது எண்ணங்களை பாராட்டி வாக்களிக்கலாம் என மக்கள் முனுமுனுத்துக் கொள்கின்றனர்.
அதேசமயம் திமுக தரப்பில் எந்த ஒரு பரபரப்பும் இன்றி வழக்கமான தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வேலூர் மாவட்ட திமுக நிர்வாகிகளுடன் கடந்த சனிக்கிழமை ஆலோசனை நடத்திய துரைமுருகன் தேர்தல் பணிகளில் எவ்வாறு ஈடுபட வேண்டும் என்பது குறித்து எடுத்துரைத்தார். மேலும் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தமிழகத்தில் 38 தொகுதிகளில் நாம் (திமுக) வெற்றி பெற்றுள்ளோம். எனவே அதே வேகத்துடன் தற்போது நடைபெற உள்ள வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலிலும் வெற்றி பெற வேண்டும் என துரைமுருகன் ஆலோசனை வழங்கியதாக கூறப்படுகிறது.
ஏ.சி.சண்முகத்தை பொருத்தவரை தனது கவர்ச்சியான வாக்குறுதிகள் மற்றும் பண பலம் ஆகியவற்றை வைத்து எப்படியும் வெற்றி பெற்றுவிடலாம் என அதீத நம்பிக்கையில் உள்ளார். அதே சமயம் திமுகவைப் பொறுத்தவரை மக்கள் மத்தியில் பாஜக எதிர்ப்பு அலை மற்றும் அதிமுகவின் பலவீனம் ஆகியவற்றை கணக்கில் வைத்து எளிதில் வெற்றி பெறலாம் என்று கணக்குப் போட்டு வைத்துள்ளது.
குறிப்பாக வேலூர் மாவட்டத்தில் ஆம்பூர், வாணியம்பாடி ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகளில் பெரும்பாலும் இஸ்லாமியர்கள் வசித்து வருகின்றனர். எனவே இந்த வாக்குகள் அனைத்தையும் முழுமையாக பெற திமுக முனைப்பு காட்டி இருக்கிறது. அதே சமயம் கடந்த முறை பணப்பட்டுவாடா புகார் காரணமாக தேர்தல் ரத்து செய்யப்பட்டதால் இந்த முறை பணப்பட்டுவாடாவை தடுக்க தீவிர நடவடிக்கையில் ஈடுபட போவதாக மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.
எனவே வேலூர் மக்களவைத் தொகுதியில் ஏசி சண்முகத்தின் நம்பிக்கை வெல்லுமா அல்லது துரைமுருகனின் கணக்கு எடுபடுமா என்பது குறித்து பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.