வேலூர் மாவட்டம் பாகாயம் மேடு இடையபட்டியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். அவர் தொரப்பாடி பகுதியில் துணி தைக்கும் கடை நடத்தி வருகிறார். அவருக்கும் கமலி என்பவருக்கும் கடந்த 19 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்து இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் தற்போது கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
அதைத்தொடர்ந்து ராமச்சந்திரன் கமலியிடமிருந்து விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடினார். ஆனால் கமலிக்கு அதில் விருப்பமில்லாததால் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. அதன்பின் ராமச்சந்திரன் இரண்டாவதாக கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஃபாத்திமா என்பவருடன் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தார். அதன்படி திருமணம் அடுக்கம்பாறை ஓசூர் அம்மன் கோயிலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ராமச்சந்திரனும்-ஃபாத்திமாவும் மணவறையில் அமர்ந்திருந்தபோது, முதல் மனைவி கமலி, தனது இரண்டு மகன்கள் மற்றும் உறவினர்களுடன் வந்து திருமணத்தை தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர் தகவலறிந்த பாகாயம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை நடத்தி, அவர்களை வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு அனுப்பிவைத்தனர். அதையடுத்து வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காவலர்கள் ராமச்சந்திரன்-கமலி பேச்சுவார்த்தை நடத்தி ஒன்றாக இருக்கும்படி அறிவுரை வழங்கி அனுப்பிவைத்தனர்.