வாக்குப்பதிவு மையங்களில் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
அதில்’’ இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தலின் பேரில் வேலூர் மாவட்டத்தில் 5 தொகுதிகளில் பதிவான வாக்குகள் 3 மையங்களில் எண்ணப்பட உள்ளன. இங்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பறை, தபால் வாக்குகள் வைப்பறை, வாக்கு எண்ணும் அறை, தேர்தல் பார்வையாளர் அறை, வேட்பாளர்கள், அவர்களின் முகவர்கள் வாக்கு எண்ணிக்கையைப் பார்வையிடத் தேவையான ஏற்பாடுகள் 100 சதவீதம் செய்யப்பட்டுள்ளன.
தேர்தல் பணியில் ஈடுபட உள்ள அலுவலர்கள் அமரத் தனி இடமும், செய்தி சேகரிக்க வரும் செய்தியாளர்கள் அமர ஊடக மையமும் அமைக்கப்பட்டுள்ளன. கரோனா பரவலைத் தடுக்க வாக்கு எண்ணும் மேஜைகள் இடைவெளி விட்டு அமைக்கப்பட்டுள்ளன. வேட்பாளர்கள், முகவர்கள் வந்து செல்ல தனி வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது. இது தவிர காவல் கண்காணிப்பு கோபுரம் அமைக்கும் பணிகள், கண்காணிப்பு கேமராக்கள், மின்விளக்குகள், மின்விசிறிகள், கழிப்பறை வசதிகள் உள்ளிட்ட பணிகளும் முடிவடைந்துள்ளன.
வருகிற மே 2 ஆம் தேதி வாக்கு எண்ணும் நாளில் எந்தவித அசம்பாவித சம்பவமும் நடைபெறாமல் இருக்க உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் விரிவாக செய்யப்பட்டுள்ளன என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: பெண்களுக்கு எதிரான தீரா வன்கொடுமை: அதிர்ச்சியளிக்கும் புள்ளி விவரம்!