வேலூர்: வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா, திருவலம் அடுத்த குகையநல்லூர் கிராமத்தில் நேற்று (டிச.28) ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்து அகற்றப்பட்டது. இதற்கு அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், வீடுகள் இடிக்கப்பட்டதால் அங்கு குடியிருந்த பொதுமக்கள் இரவு முழுவதும் தெருவிலேயே தங்கி இருந்தனர்.
இந்த நிலையில், சம்பந்தப்பட்ட மக்கள் இன்று (டிச.29) வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் போலீசார் பாதுகாப்பை அதிகப்படுத்தியிருந்தனர்.
வேலூர் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திருநாவுக்கரசு தலைமையில், மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் பகுதியில் பேரிகாடுகள் வைக்கப்பட்டு ஏராளமான காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இதுமட்டும் அல்லாது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தவர்களை, போலீசார் சோதனை செய்து உள்ளே அனுப்பினர். இந்த நிலையில், அங்குப் போராட்டத்தில் ஈடுபடும் நோக்கத்தில் வந்த சம்பந்தப்பட்ட குகையநல்லூரைச் சேர்ந்த மக்கள் சுமார் 30க்கும் மேற்பட்டவர்களை போலீசார் நுழைவு வாயிலிலேயே தடுத்து நிறுத்தினர்.
மேலும், அனைவரையும் ஆட்சியர் அலுவலகத்தின் உள்ளே செல்ல அனுமதிக்க மாட்டோம் எனவும், போராட்டக்காரர்களிடம் போலீசார் மறுப்பு தெரிவித்துள்ளனர், அவர்களில் சிலரை மட்டுமே ஆட்சியர் அலுவலகத்திற்குள் அனுமதித்தனர்.
இதன் தொடர்ச்சியாக, குகையநல்லூரைச் சேர்ந்த மக்கள் சிலர் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில், "எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது எங்களுக்கு எங்களது கிராமத்திலேயே வீட்டுமனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்திருந்தனர்.
ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாக வீடுகள் அகற்றப்பட்டதால் இரவு முழுவதும் தெருவில் இருந்த பொதுமக்கள், வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால், ஏராளமான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வேலூரில் 18 டன் பஞ்சு காட்டன் நூல் ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்து; 4 பேர் படுகாயம்!