வேலூர் சலவன்பேட்டையைச் சேர்ந்த 18 வயதான இளைஞர் ஒருவர் தனது குழந்தை பருவத்தில் இருந்தே சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வந்தார். நாளடைவில் பாதிப்பு தீவிரமடைந்த நிலையில் இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்தன.
நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த அந்த இளைஞருக்கு, மிகவும் சிரமப்பட்டு பெற்றோர் மாதம் சுமார் 60 ஆயிரம் வரை செலவிட்டு வேலூர் சிஎம்சியில் 'டயாலிசிஸ்' சிகிச்சை அளித்து வந்தனர். சிகிச்சை அளித்தும் நாளடைவில் நிலைமை இன்னும் மோசமாகவே அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர். அறுவை சிகிச்சைக்கு ரூ.12 லட்சம் வரை செலவாகும் என்று கூறப்பட்டுள்ளது.
இளைஞர், நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் சிகிச்சைக்கான பணத்தைத் திரட்ட முடியாமல் அரசு சாரா அமைப்புகளையும், தொண்டு நிறுவனங்களையும் நாடியிருக்கிறார். இதனிடையே வேலூரில் உள்ள நடிகர் விஜய் மக்கள் இயக்கம் இந்த இலைஞரின் அறுவை சிகிச்சைக்கு உதவும் வகையில் நிதி திரட்ட முடிவு செய்தது.
நடிகர் விஜயின் பரிந்துரையின் பேரிலும், அனைத்து இந்திய விஜய் மக்கள் இயக்கத்தின் தலைவரும் புதுச்சேரியின் முன்னாள் எம்எல்ஏவுமான புஸ்ஸி ஆனந்தின் அறிவுரையின் பேரிலும், வேலூர் மாவட்ட தலைவர் வேல்முருகன் மற்றும் இயக்கத்தின் தொண்டர்கள் சேர்ந்து ரூபாய் 1 லட்சம் நிதி திரட்டினர். இதனை இன்று (அக். 27) வேலூர் விஜய் மக்கள் இயக்கத்தின் அலுவலகத்தில் வைத்து இளைஞரின் பெற்றோரிடம் வழங்கினர்.
இது தொடர்பாக இளைஞரின் பெற்றோர் கூறுகையில் "நீண்ட நாட்களாக எங்களது மகனின் சிகிச்சைக்காக போராடி பணம் ஈட்டி வருகிறோம். எங்களது உறவினர்கள் கூட உதவ முன் வரவில்லை. விஜய் மக்கள் இயக்கத்தை நாடி வந்தோம். அவர்களால் இயன்ற நிதியை திரட்டி கொடுத்துள்ளனர். மேலும் நிதி திரட்ட முயற்சி செய்வதாகவும் தெரிவித்துள்ளனர்”என்றனர்.
இதையும் படிங்க:முதலமைச்சர் காப்பீடு திட்டத்தில் மோசடி: தனியார் மருத்துவமனை மீது கடலூர் ஆட்சியரிடம் புகார்