வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த செல்வகுமார் சென்னைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதனையடுத்து அம்மாவட்டத்தில் உள்ள புளியந்தோப்பு பகுதியின் காவல் துணை ஆணையராக இருந்த ராஜேஷ் கண்ணன் வேலூர் மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளராக நேற்று (டிசம்பர் 1) பொறுப்பேற்றுக்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளரைச் சந்தித்த அவர், “இதற்கு முன்பு இருந்த காவல் கண்காணிப்பாளர் ரவுடிசத்தைக் குறைக்க சிறப்பான நடவடிக்கைகளை எடுத்துள்ளார். அந்த நடவடிக்கைகள் மேலும் தொடரும்.
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைக் களைவதிலும் சிறப்பான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைக் குறைக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
காவலர்களின் நலனில் மிகுந்த அக்கறை செலுத்தப்படும். மாநில காவல் துறையால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள காவலர்கள் நலத்திட்ட முயற்சிகள் சிறந்த முறையில் இம்மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும்.
போக்குவரத்தில் பிரச்சினைகள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது மாவட்ட நிர்வாகத்தால் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்றுவருவதால் அப்பகுதிகளில் போக்குவரத்துச் சிக்கல் இருந்துவருகிறது, இதனைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மாவட்டத்தில் இளம் சிறார்கள் பலரும் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டுவருவது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த காவல் கண்காணிப்பாளர், நான் இதற்கு முன்பு பணிபுரிந்த புளியந்தோப்பு பகுதியிலும் இதே போன்ற பிரச்சினை இருந்தது. கிட்டத்தட்ட 600 பேர் குற்றப்பின்னணி உடையவர்களாக இருந்தனர்.
அவர்களில் பலரும் இளம் சிறார்களாக இருந்தனர். இவர்களைப் போன்றவர்களைக் கண்டறிந்து 18 வயதிற்குள் இருக்கக்கூடிய இவர்கள் என்ன காரணங்களுக்காகக் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டனர் என்பதைக் கண்டறிந்து அவர்களுக்கு மறுவாழ்வை ஏற்படுத்தினோம்.
பலரை அதிலிருந்து மீட்டெடுத்து பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் சேர்த்தோம். மேலும் கல்வி படிக்க விருப்பம் இல்லாதவர்களுக்கு அரசால் நடத்தப்படுகின்ற திறன் மேம்பாட்டு பயிற்சிகளில் உள்ள சிறிய அளவிலான பணிகளை மேற்கொள்ள வைத்து அவர்களுக்கு மறுவாழ்வு அளித்தோம். இவற்றை வேலூர் மாவட்டத்தில் சிறப்பான முறையில் செயல்படுத்தவுள்ளோம்” என்றார்.
இதையும் படிங்க: 6 பெண்களைத் திருமணம் செய்து நகைகளை அபேஸ் செய்தவர் கைது