இளநிலை மருத்துவப்படிப்பு மாணவர் சேர்க்கைகான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் நேற்று (செப்.13) நடைபெற்றது.
இதில் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் (வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர்) 15 மையங்களில் நடைபெற்ற நீட் நுழைவு தேர்வில் மொத்தம் 8 ஆயிரத்து 370 மாணவ - மாணவிகள் தேர்வெழுத இருந்த நிலையில் 6 ஆயிரத்து 958 பேர் என 83.1 விழுக்காடு மாணவர்கள் தேர்வெழுதியுள்ளனர்.1,412 பேர் 16.9 விழுக்காடு நபர்கள் தேர்வில் பங்கேற்கவில்லை.
கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு 1.4 விழுக்காடு மாணவர்கள் அதிகம் வருகை புரிந்துள்ளனர். திருப்பத்தூர், வேலூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவர்களின் வருகை அதிகமாக உள்ளது. இந்த ஆண்டு ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் நீட் தேர்வெழுத விண்ணப்பித்த அரசு பள்ளி மாணவ, மாணவிகள் மொத்தம் 625 பேர்.
இது கடந்த ஆண்டு விண்ணப்பித்தவர்கள் எண்ணிக்கை 548 பேராக உள்ளது. அந்த வகையில் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு அதிகமாக அரசு பள்ளி மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
தேர்வு துவங்கும் முன்னதாக 15 மையங்களிலும் மாணவர்கள் தீவிர பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டனர். மேலும் கரோனா பரவலை தடுக்க அரசு கூறிய விதிமுறைகளும் பின்பற்றப்பட்டது.
குறிப்பாக அனைத்து மையங்களிலும் பெற்றோர்கள் ஓய்வெடுக்க தனி இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. மேலும் ஒவ்வொரு மையத்திர்க்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒரு மருத்துவர், இரண்டு செவிலியர்கள் நிறுத்தப்பட்டிருந்தனர்.