வேலூர் மாவட்டம் பெருமுகை பகுதியிலுள்ள கல்குவாரியில் கடந்த 18ஆம் தேதி அடையாளம் தெரியாத இளம்பெண் ஒருவர், சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் காவல் துறை நடத்திய விசாரணையில், அப்பெண் அரியூரைச் சேர்ந்த சரவணன் என்பவரின் மகள் என்றும் அவர் வேலூரில் சிஎம்சி மருத்துவமனை கேன்டீனில் பணிபுரிந்தார் என்றும் தெரியவந்தது.
இருப்பினும், அவர் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதும் காரணத்துக்காகக் கொலை செய்யப்பட்டாரா போன்ற பல்வேறு கோணங்களில் விசாரணை தொடங்கிய காவல் துறைக்கு சரியான துப்பு கிடைக்காமல் விசாரணை செய்துவந்தனர். அதன்பிறகு இறந்தவரின் மருத்துவமனையில் பணிபுரிந்த நபர்களுக்கு இந்த வழக்கில் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்தும் விசாரணை செய்து வந்தனர். இதனிடையே, ஆட்டோ ஓட்டுநர் பிரகாஷ் என்பவருடன் தனது மகளுக்கு பழக்கம் இருப்பதாக அவரின் பெற்றோர் காவலர்களிடம் தெரிவித்தனர்.
இதையடுத்து, வேலூர் ரங்காபுரம் மூலக்கொல்லையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பிரகாஷ், அவரது நண்பர் நவீன்குமார்(20) இருவரையும் காவல் துறையினர் பிடித்து விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. இது குறித்து காவல் துறையினர் கூறுகையில், ”ஆட்டோ ஓட்டுநர் பிரகாஷும் சரவணனின் மகளும் கடந்த இரண்டு மாதங்களாக காதலித்து வந்துள்ளார்கள். இந்நிலையில், கடந்த நான்காம் தேதி வேலூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து அப்பெண்ணை பிரகாஷ் தனது ஆட்டோவில் பெருமுகை கல்குவாரிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு அப்பெண் தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி பிரகாஷை வற்புறுத்தியுள்ளார். இதற்குப் பதிலளித்த பிரகாஷ், ’நீ என்னிடம் மட்டுமா பழகுகிறாய், பலருடன் பழக்கம் வைத்துள்ளாய். உனது நடத்தையில் சந்தேகம் இருப்பதால் திருமணம் செய்ய முடியாது’ எனக் கூறியுள்ளார். இதனால் ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்ற, பிரகாஷ் திடீரென்று உயரத்திலிருந்து அப்பெண்ணை பள்ளத்தில் தள்ளியுள்ளார். இதில், பலத்த காயமடைந்த அப்பெண் சம்பவ இடத்திலே பரிதாபாமாக உயிரிழந்தார்.
இதையடுத்து செய்வதறியாத பிரகாஷ் உடனடியாக தனது நண்பன் நவீன்குமாரை தொடர்புகொண்டு உதவி கோரியுள்ளார். அதன்பின், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற நவீன்குமார் கொலையிலிருந்து எப்படி தப்பிப்பது என்று பிரகாஷுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். அதன்படி, அப்பெண்ணின் செல்போனை எடுத்துவிட்டு அங்கிருந்து இருவரும் தப்பி ஓடியுள்ளனர். அந்த செல்போனுக்கு கடைசியாக யாரெல்லாம் பேசினார்கள் என்பதை நாங்கள் ஆய்வுசெய்யும்போது பிரகாஷ் கையும்களவுமாக சிக்கினார்” என்று கூறினர். வெறும் இரண்டே மாதம் மட்டுமே பழகிய காதல் கொலையில் முடிந்த சம்பவம் வேலூர் மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: அரசு ஊழியரிடம் 1.8 லட்சத்தை கொள்ளையடித்த ஏடிஎம் கொள்ளையன் -வெளியான சிசிடிவி காட்சி