வேலூர் மாவட்டம் முழுவதும் கடந்த நான்கு நாள்களாக ஆங்காங்கே கனமழை பெய்துவருகிறது. இதனால், வேலூர் மாவட்டம் ஓச்சேரி அருகேயுள்ள ஆயர்பாடி கிராமத்தில் ராஜலட்சுமி என்பவருக்குச் சொந்தமான மூன்று அடுக்கு மாடிக்கட்டடம் இடிந்து விழுந்து முழுவதுமாக சேதமடைந்துள்ளது.
இதேபோன்று, அரக்கோணத்தில் நான்கு வீடுகள், ஆம்பூரில் ஒரு வீடு, குடியாத்தத்தில் ஒரு வீடு என மொத்தம் ஏழு வீடுகள் சேதமடைந்துள்ளன. இந்தத் தொடர் மழையால் அடுக்குமாடிக் கட்டடம் இடிந்து விழுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வீட்டில் இருந்தவர்கள் வெளியே சென்றதால் நல்வாய்ப்பாக உயிர் இழப்பு ஏதும் ஏற்படவில்லை. முன்னதாக மானாமதுரையில் பெய்த கனமழையில் பள்ளிக் கட்டடம், ஒன்பது வீடுகள் இடிந்து விழுந்தன. பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டதால் நற்பேறாக உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.