இந்திய சுதந்திர வரலாற்றில் முதல்முதலாக சிப்பாய் கலகம் நடைபெற்ற வேலூர் கோட்டை இன்றளவும் கம்பீரத்துடன் காட்சியளிக்கிறது. மன்னர்கள் காலத்தில் பாதுகாப்பு அரணாக இந்தக் கோட்டை திகழ்ந்துவந்தது. இதில்தான் மன்னர் திப்புசுல்தானின் குடும்பத்தினர் ஆங்கிலேயர்களால் சிறைப்பிடித்து வைக்கப்பட்டிருந்தனர்.
நான்கு புறமும் கற்கலால் அழகுற அமையப்பெற்ற இந்தக் கோட்டையின் உள்ளே அமைந்துள்ள அருங்காட்சியகம், கோட்டைக்கு வெளிப்புறத்தில் உள்ள பூங்காவைச் சுற்றிப்பார்க்க நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்துசெல்கின்றனர்.
இந்நிலையில் சீர்மிகு நகர் திட்டத்தின் கீழ் வேலூர் கோட்டையை அழகுபடுத்த மாநகராட்சி, தொல்லியல் துறை இணைந்து நடவடிக்கை எடுத்துவருகிறது. அதன்படி ரூ.33 கோடி மதிப்பில் வேலூர் கோட்டை உள்புறம் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது, வண்ண விளக்குகள் அமைத்து இரவு நேரங்களில் கோட்டை அழகாகத் தெரியும் வகையில் அலங்கரிப்பது, கோட்டை முன்புறமுள்ள அகழியை தூர்வாரி படகுசவாரி ஏற்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெறவுள்ளது.
இதன் முதல்கட்டமாக அகழியை தூர்வாரும் பணிகள் சில தினங்களுக்கு முன்பு தொடங்கியது. ஒரு மீட்டர் ஆழத்திற்கு அகழி தூர்வார்வதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதற்காக சென்னையிலிருந்து நான்கு நவீன மிதவை இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டன.
தற்போது இயந்திரங்கள் மூலம் கோட்டையைச் சுற்றியுள்ள அகழியில் காணப்படும் கழிவுகள் தூர்வாரப்பட்டுவருகிறது. விரைவில் இந்தப் பணிகள் முடிக்கப்பட்டு அடுத்தகட்டமாக கோட்டை உள்புறம் அழகுபடுத்தும் பணிகள் நடைபெறும் என மாநகராட்சி அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: இடைத் தேர்தலில் அதிமுகவே வெற்றிபெறும் - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்