வேலூர் மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் கே. ராமமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஏராளமான விவசாயிகள் மற்றும் விவசாய தொழில் சார்ந்த மக்கள் பங்கேற்றனர். அப்போது, அவர்களிடம் குறைகள் மற்றும் தேவைகள் குறித்து விளக்கும்படி அதிகாரிகள் தெரிவித்தனர். அப்போது, அதிகாரிகளையே சிந்திக்க வைக்கும் வகையில் விவசாயிகள் பல்வேறு தேவைகளையும், நடவடிக்கைகளையும் மேற்கொள்ள அறிவுறுத்தினர்.
விவசாய நிலங்களின் நிலத்தடி நீர் மட்டம்: வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் பலரும் விவசாயத்தை நம்பியே தங்கள் வாழ்வாரத்தை கழித்து வருகின்றனர். ஆனால், தண்ணீர் பற்றாக்குறை இருப்பதால் போதிய விளைச்சல் எடுப்பதில் சிறமம் இருப்பதாகவும் அதற்காக பாலாற்றின் குறுக்கே 5 கிலோ மீட்டர் இடைவெளி விட்டு தடுப்பணை கட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
தென்னை விவசாயம்: தென்னை விவசாயிகளின் நிலை மிகவும் மோசமாக உள்ளது என வேதனை தெரிவித்த விவசாயிகள் தேங்காய்களுக்கு உரிய விலை கிடைப்பது இல்லை எனவும் இதை சரிசெய்ய, தமிழ்நாடு முழுவதும் நியாய விலைக் கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்க அரசுக்கு மாவட்ட நிர்வாகம் பரிந்துரைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர். இதன் மூலம் தேங்காயிக்கு உரிய விலை கிடைக்க வாய்ப்பு உள்ளதாக விவசாயிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
விவசாயிகளுக்கு இழப்பீடு: இயற்கை இடர்பாடுகளால் பாதிக்கப்படும் பயிர்களுக்கு நஷ்டஈடு வழங்கப்படுவதில்லை. எனவே, இயற்கை இடர்பாடுகள், வனவிலங்குகளால் பயிர்கள் சேதமடையும்போது அவற்றுக்கு அரசு பாரபட்சமின்றி உரிய நஷ்டஈடு வழங்கிட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.
நெல் பயிரில் நஷ்டமே மிச்சம்: மாவட்டம் முழுவதும் பல ஏக்கர் பரப்பளவில் நெல் பயிரிடப்படும் நிலையில் அதனால் எவ்வித லாபமும் ஈட்ட முடியவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். ஒரு ஏக்கர் நெல் உற்பத்திச் செலவு ரூ.23 ஆயிரத்து 500 ஆகும் நிலையில், அதன்மூலம் கிடைக்கும் வருவாய் ரூ.26ஆயிரத்து 500 ஆக உள்ளது. இதனால், விவசாயிகள் பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர். விவசாயிகளுக்கு நியாயவிலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
கரும்பு விவசாயிகள்: சிறப்பான சர்க்கரை உற்பத்தியில் ஈடுபட்டு வந்த ஆம்பூர் சர்க்கரை ஆலை மூடப்பட்டதன் பின்னணியில் தனியார் ஆலைகள் உள்ளதா என்ற சந்தேகம் உள்ளது. ஆம்பூர் சர்க்கரை ஆலை இயந்திரங்களை புதுப்பித்து ஆலையை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோல், அரியூரில் மூடப்பட்டுள்ள அரசு நூற்பாலையை மீண்டும் திறக்கவும், அரசின் சிறிய ஜவுளிப்பூங்கா திட்டத்தை அரியூரில் செயல்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வங்கிக் கடன் : கூட்டுறவு வங்கிகளில் கால்நடைகள் வாங்குவதற்கு வட்டியில்லா கடனுதவி செய்திட வேண்டும்.அரசு மணல் கிடங்கிலிருந்து லாரிகள், மாட்டு வண்டிகளுக்கு மட்டும் மணல் வழங்கப்படும் நிலையில் டிராக்டர்களுக்கும் மணல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற இன்னும் பல முக்கிய கோரிக்கைகளை விவசாயிகள் முன் மொழிந்துள்ளனர்.
இயற்கை மீதும், விவசயத்தின் மீது விவசாய தொழிலாலர்கள் மீது முழுக்க முழுக்க அக்கரை கொண்டு பல்வேறு கோரிக்கைள் மற்றும் திட்டங்கள் குறித்து விவாதித்த வேலுர் மாவட்ட விவசாயிகள் விஞ்ஞான விவசாயிகள் என்றே கூறலாம். விவசாயிகளின் இந்த கோரிக்கைகளை கேட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துச் சென்றனர்.
இதையும் படிங்க: 429 மனுக்களில் 75 மட்டுமே ஏற்பு.. செய்யாறு எம்.எல்.ஏ வைத்த கோரிக்கை!