திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ரஞ்சித் என்பவரது நிலப் பத்திரத்தை விசாரணையில் இருந்து விடுவிக்க, 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டததை அடுத்து தனித்துணை ஆட்சியர் தினகரனை வேலூர் லஞ்ச ஒழிப்புத்துறை காவல் துறையினர் கையும் களவுமாக பிடித்தனர்.
கைது செய்யப்பட்ட அவரிடம் லஞ்ச ஒழிப்புத்துறை காவல் துறையினர் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அவரது அறையில் நடத்திய சோதனையில், கணக்கில் வராத 1.94 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. காட்பாடி தாங்கல் பகுதியிலுள்ள தினகரனின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை காவல்துறையினர் அதிரடியாக நடத்திய சோதனையில், இரும்பு பெட்டியில் கட்டுகட்டாக பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பெட்டியில் புதிய 500, 2000 தாள்கள் கொண்ட கட்டுகளை பறிமுதல் செய்தனர்.
அவரிடமிருந்து, மொத்தமாக கணக்கில் வராத 76 லட்சத்து 64 ஆயிரத்து 600 ரூபாய் ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து துணை ஆட்சியர் தினகரன், டிரைவர் ரமேஷ் ஆகிய இருவரையும் வேலூர் முதன்மை குற்றவியல் நடுவர் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர்.
இருவரையும் 15 நாள்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதை அடுத்து, வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். தொடர்ந்து துணை ஆட்சியருக்குச் சொந்தமான இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது. துணை ஆட்சியர் வீட்டில் கட்டுகட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது, அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நிலம் விவகாரம் தொடர்பாக தன்னிடம் வரும் பொதுமக்களிடம் முறைகேடான வகையில் லட்சக்கணக்கில் துணை ஆட்சியர் லஞ்சம் பெற்று வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : கள்ளச்சாராயம் விற்ற பெண் குண்டர் சட்டத்தில் கைது!