வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே நாராயணபுரம் காலனி உள்ளது. பட்டியலின மக்கள் அதிகம் வசிக்கும் இப்பகுதியில், இவர்களுக்கென்று 50 அடியில் இருந்து 60 அடி வரையிலான சுடுகாடு உள்ளது. இங்கு போதிய வசதி இல்லாததால், பாலாற்றங்கரை சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்கின்றனர். இந்நிலையில், சில வருடங்களுக்கு முன்பு பாலாற்றைக் கடக்க பாலம் கட்டப்பட்டது. இதனால் பாலாற்றின் இருபுறங்களிலும் செல்லும் பாதையை வேலி அமைத்து வழியை விவசாயிகள் அடைத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சூழலில், சில தினங்களுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த குப்பன் என்பவர் சாலை விபத்தில் உயிரிழந்தார். இவரது சடலத்தை பாலாற்று வழியாக அவரது உறவினர்கள் எடுத்துச் சென்றபோது, விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், வேறு வழியின்றி குப்பனின் சடலத்தை மேம்பாலத்தில் இருந்து கயிறு கட்டி இறக்கி சுடுகாட்டிற்கு எடுத்துச் சென்றனர். இந்த சம்பவம் சமூகவலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இது குறித்த செய்தி வெளியானதையடுத்து, வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் உத்தரவின்பேரில், வாணியம்பாடி வட்டாட்சியர் முருகன் தலைமையிலான வருவாய் துறையினர், சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர். இதனையடுத்து, ஆதிதிராவிட மக்களின் சுடுகாட்டிற்கு இடம் ஒதுக்கப்படும் என்று ஆட்சியர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டார். அதன் அடிப்படையில், ஆதிதிராவிட மக்களுக்கு 50 சென்ட் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும், இறந்தவரின் சடலத்தை எடுத்துச் செல்ல யாரேனும் எதிர்ப்பு தெரிவித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆட்சியர் உறுதியளித்தார்.