மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலையொட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து இன்று மூன்றாவது நாளாக பரப்புரையை தொடங்கியுள்ளார்.
அதன்படி வேலூர் தொகுதியில் போட்டியிடும் புதிய நீதி கட்சி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து அவர் பரப்புரை மேற்கொண்டார். வேலூர் சத்துவாச்சாரி கங்கையம்மன் கோயில் திடலில் பொதுமக்கள் மத்தியில் அவர் பேசுகையில், ”தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணிக்கு அனைவரும் வாக்களிப்பதன் மூலம் செழிப்பான தமிழ்நாட்டை உருவாக்க முடியும்.
கடவுளை கும்பிடுபவர்களை பார்த்திருக்கிறேன், பக்தி இருப்பவரை பார்த்திருக்கிறேன் ஆனால் கடவுள் என்று சொல்பவராக பழனிசாமியை பார்க்கிறேன் என்று ஸ்டாலின் பேசியிருக்கிறார். நான் எப்போதாவது அப்படி சொல்லி இருக்கிறேனா? பாவம் அவரால் ஒன்றும் குறை கண்டுபிடிக்க முடியவில்லை.
அவர் சாமி கும்பிடமாட்டார்; ஆனால் அவர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் விழுந்து விழுந்து சாமி கும்பிடுவார்கள். சாமி கும்பிடுவது என்பது ஒருவரின் தனிப்பட்ட உரிமை. நம் நாடு அனைத்து தர மக்களைக் கொண்ட நாடாகும். ஆகவே உங்களை போன்று கடவுள் இல்லை என்று சொல்லிவிட்டு குடும்பத்தாரை சாமி கும்பிட வைப்பவர்கள் நாங்கள் அல்ல. எனவே இதை விட்டுவிட்டு வேறு ஏதாவது குறையைக் கண்டுபிடித்து பேசுங்கள்.
இன்னும் ஒன்று சொல்கிறார், நான் ஏதோ கொலை செய்துவிட்டேனாம். கொடநாடு கொலையை கண்டுபிடித்ததே அதிமுக அரசுதான். அந்த கொலை குற்றவாளியை சிறையில் அடைத்ததும் நாங்கள்தான். ஆனால் அவர்களை திமுக ஏன் பிணையில் எடுக்க வேண்டும். எனவே அந்த கொலைக்கும், திமுகவிற்கும் சம்பந்தம் இருப்பதாக மக்கள் சந்தேகிக்கிறார்கள் அந்த சந்தேகத்தை போக்கும் வகையில் அதிமுக அரசு விசாரணை மேற்கொள்ளும்” என்றார்.