வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டாவையடுத்த வெட்டுவானம் அம்பேத்கர் நகரை சேர்ந்த சரண்ராஜ், மோனிகாராணி தம்பதியினருக்கு நட்சத்திரா(4) என்ற பெண் குழந்தை இருந்தது. நட்சத்திரா அருகில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 11ஆம் தேதி நட்சத்திராவுக்கு காய்ச்சல் ஏற்பட்டதால் அப்பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் அவரது பெற்றோர்கள் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
ஆனாலும், காய்ச்சல் அதிகரித்ததால் உடனடியாக அடுக்கம்பாறையில் உள்ள அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கேயும் அவருக்கு காய்ச்சல் குணமாகததையடுத்து, வேலூரில் பிரபல தனியார் மருத்துமனையில் நட்சத்திராவை சிகிச்சைக்காக அவரது பெற்றோர்கள் அனுமதித்தனர். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சிறுமி நட்சத்திரா நேற்று உயிரிழந்தார்.
இதற்கிடையில் தகவல் அறிந்து வேலூர் மாவட்ட சுகாதார துணை இயக்குநர் சுரேஷ், சிறுமி நட்சத்திரா பயின்று வந்த தனியார் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அந்தப் பள்ளியில் டெங்கு காய்ச்சல் பரவுவதற்கான அறிகுறிகள் காணப்பட்டதோடு டெங்கு கொசுக்கள் அப்பள்ளியில் உற்பத்தியாவதும் தெரியவந்தது. இதனையடுத்து அந்த பள்ளி நிர்வாகத்திற்கு ஒரு லட்சம் அபராதம் விதித்து துணை இயக்குனர் சுரேஷ் உத்தரவிட்டார்.
மேலும், அந்த பள்ளியின் பல்வேறு பகுதியில் கிராம சுகாதார செவிலியர்கள் மூலம் ஆய்வு நடத்தப்பட்டது. மேலும், அந்த பள்ளியில் பயிலும் பிற மாணவர்களுக்கும் டெங்கு பரவாத வகையில் நாளை ஒருநாள் மருத்துவ முகாம் நடைபெற இருப்பதாக சுகாதார துணை இயக்குனர் தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு ஜனவரி 1முதல் அக்டோபர் 14ஆம் தேதி வரை டெங்குவால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்தம் 792 பேர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: குழந்தைகளின் ஆபாச காணொலி - சென்னையில் சிபிஐ சோதனை