வேலூர் மக்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் பரிசீலனை மாவட்ட ஆட்சியர் அலுவலக அரங்கில் நேற்று நடைபெற்றது. அப்போது தேசிய மக்கள் சக்தி கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் காட்ஃப்ரே நோபல் என்பவர், தேர்தலின்போது பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த்தின் வேட்பு மனுவை நிராகரிக்க வேண்டும் என ஆட்சேபனை தெரிவித்தார்.
இதன்காரனமாக அங்கிருந்த திமுக தொண்டர்கள் திடீரென அவர் மீது தாக்குதலில் ஈடுபட முயன்றனர். இரு தரப்புக்கும் இடையே சலசலப்பு ஏற்பட்டதால் காவல்துறையினர் தலையிட்டுச் சமாதானப்படுத்தி அனுப்பிவைத்தனர்.
இந்நிலையில் திமுக தனக்குக் கொலை மிரட்டல் விடுப்பதாகத் தேசிய மக்கள் சக்தி கட்சி வேட்பாளர் காட்ஃப்ரே நோபல் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்தார். இது குறித்து அவர் கூறுகையில், திமுக வேட்பாளர் மனு மீது ஆட்சியபனை தெரிவித்ததால் தனக்குக் கொலை மிரட்டல்கள் வருவதாகவும் அதனால் பிரச்சாரம் முடியும் வரை காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கையையும் வைத்தார்.