தேனி: பெட்ரோல் விலை அதிகரிப்பால் மின்சார இருசக்கர வாகனங்களின் மீதான மோகம் மக்களிடத்தில் அதிகரித்து காணப்படுகிறது. எனினும், இவற்றை அதிக தூரப் பயணத்திற்கு பயன்படுத்த முடியாத சூழல் நிலவுகிறது. முக்கியமாக இந்த எலெக்ட்ரிக் பைக்குகளில் பேட்டரி வரம்பு முடிந்தவுடன், மீண்டும் சார்ஜ் செய்ய வேண்டும். இதுபோன்ற சூழலில், பழைய மிதிவண்டிகளில் இருக்கும் முகப்பு விளக்குகளின் மின்சாரத்திற்காக, நாம் பயன்படுத்திய ‘டைனமோ’ என் ஞாபகத்திற்கு வரும். மிதிவண்டியின் சக்கரத்தில், டைனமோவுடன் இணைக்கப்பட்ட சிறிய சக்கரம் ஒட்டியபடி இருக்கும். சக்கரம் சுழலும்போது, அதிலிருந்து கிடைக்கும் மின்சாரம் முகப்பு விளக்கை ஒளிரச்செய்து, மிதிவண்டி ஓட்டுபவருக்கு வெளிச்சத்தைத் தரும். ஏன் இப்படி ஒரு தொழில்நுட்பத்தை தற்கால மின்சார பைக்குகளில் பயன்படுத்த முடியாதா என்று அவ்வப்போது நினைப்பதுண்டு.
இதனை தற்போது மெய்ப்பித்திருக்கின்றனர் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகேயுள்ள மீனாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்த, வணிகவியல் முதுகலைப் (M.com) பட்டதாரிகளான சிவமூர்த்தி (24), சிவனேஸ்வரன் (22) ஆகிய சகோதரர்கள். தந்தை ரமேஷ் எப்போதும், “எதையாவது புதுசா கண்டுபிடிங்க” என்று சொல்லிக்கொண்டே இருப்பார் எனக் கூறும் சகோதரர்கள், அவர் வாயிலாகக் கிடைத்த ஊக்கமே, தானாக ரீசார்ஜ் செய்துகொள்ளும் மின்சார பைக்கை தயாரிக்க உத்வேகம் அளித்தது என்று தெரிவித்தனர்.
ஊக்கமளித்த தந்தை
படிப்பை முடித்துவிட்டு தங்கள் கிராமத்தில் தங்கியிருந்த சகோதரர்கள், தங்களது நேரத்தை பயனுள்ள வகையில் மாற்ற வேண்டும் என்பதற்காக தந்தையின் உதவியுடன் புதிய கண்டுபிடிப்புகளில் இறங்கினர். இவர்களுக்கு மோட்டார் வாகனம் மீது அதிக ஆர்வம் இருந்ததால், இருசக்கர வாகனங்களைக் கொண்டு ஏதேனும் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க முயற்சிகள் மேற்கொண்டனர்.
தற்போது மின்சார இருசக்கர வாகனங்களின் (எலெக்ட்ரிக் பைக்) தேவை மக்களிடையே அதிகரித்து வருவதால் அதில் என்ன மாற்றம் கொண்டு வரலாம் என யோசித்தனர். அப்போது எலெக்ட்ரிக் பைக்குகள் நீண்ட தூரம் செல்ல முடியாமல் அவ்வப்போது சார்ஜ் செய்யும் நிலை இருப்பதைக் கண்டு, இதில் புதிய மாற்றங்களை கொண்டுவர முடியுமா என்பதை யோசித்தனர். அதோடு விட்டுவிடாமல், அதற்கான முயற்சிகளிலும் இறங்கினர். மூன்று மாத காலம் அயராத உழைப்பால், மின்சார இருசக்கர வாகனங்கள், ‘டைனமோ’ உதவியுடன் சுயமாக சார்ஜ் செய்யும் முறையைக் கண்டுபிடித்தனர்.
சாதித்துக் காட்டிய சகோதரர்கள்
இதற்காக தந்தையின் உதவியுடன் தாங்கள் சேர்த்து வைத்திருந்த பணத்தைக் கொண்டு பழைய சுசுகி பைக்கை 25 ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளனர். தங்களின் தேவைக்கேற்ப, அதிலுள்ள பாகங்களை அகற்றி பைக்கை மாற்றி அமைத்துள்ளனர். இதுகுறித்து பேசிய சிவமூர்த்தி, “இதில் இரண்டு லித்தியம் ஐயன் பேட்டரிகள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரிகள் டைனமோ முறையில் வாகனத்தை ஓட்டும்போது தானாக சார்ஜ் செய்துகொள்ளும்,” என்றார்.
இதையும் படிங்க |
தொடர்ந்து பேசிய அவர், “இரண்டு பேட்டரிகள் பொருத்தப்பட்டு இருப்பதால் இருசக்கர வாகனத்தை ஓட்டி செல்லும்போது ஒரு பேட்டரி 70% சார்ஜ் தீர்ந்து போகும் நேரத்தில், மற்றொரு பேட்டரியில் 100% சார்ஜ் முழுமையாக இருக்கும் எனவும், சுழற்சி முறையில் பேட்டரிகள் தனக்குத் தானே சார்ஜ் செய்து கொள்வதால், எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் இயக்கிக் கொள்ளலாம்,” எனத் தெரிவித்தார்.
உதவினால் உதவலாம்
சிவமூர்த்தியின் தம்பியான சிவனேஸ்வரன் கூறுகையில், “பேட்டரிகள் வாயிலாக இயங்கும் இருசக்கர வாகனத்தை மூன்று மாதங்கள் மேற்கொண்ட தொடர் முயற்சியின் விளைவாகக் கண்டுபிடித்தோம். இதற்காக ஒரு லட்சத்து 66 ஆயிரம் ரூபாய் செலவு செய்துள்ளோம். அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் தங்களுக்கு பொருளாதார உதவி செய்தால், இதன் செலவுகளை குறைத்து பொதுமக்களுக்கு உதவும் வகையில், குறைந்த விலையில் அதிகதூரம் பயணம் செய்யக்கூடிய மின்சார பைக்கை எங்களால் தயாரித்து வழங்கமுடியும்,” என்றார்.
இந்த வாகனங்களை உபயோகிப்பதால் பொதுமக்களுக்கு பெட்ரோல் மற்றும் மின்சார செலவுகள் குறையும் எனவும், இதற்காக தாங்கள் காப்புரிமை வைத்திருப்பதாகவும் தெரிவித்தனர். அடுத்தடுத்தக் கட்டங்களில் இவர்களது முயற்சிகளும், ஆய்வுகளும் தொடர்ந்தால், தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட அதிக தூரம் செல்லும் எலெக்ட்ரிக் பைக்காக, இவர்களது தயாரிப்பு இருக்கும்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
தொழில்நுட்பம் சார்ந்த அண்மை செய்திகளுக்கு ஈடிவி பாரத் தமிழ்நாடு 'டெக்னாலஜி' பக்கத்துடன் இணைந்திருங்கள்.