வேலூர்: குஜராத்தில் இளம்பெண்ணை கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்த வழக்கில் விடுவிக்கப்பட்ட நபர்களை மீண்டும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்ட உச்ச நீதிமன்ற தீர்ப்பை, விடுதலை சிறுத்தைகள் கட்சி வரவேற்கிறது என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
இது குறித்து வேலூர் குடியாத்தத்தில் நேற்று (ஜன.8) இரவு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கடந்த 2002ஆம் ஆண்டு குஜராத் கலவரத்தின்போது பில்கிஸ் பானு என்ற பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளை குஜராத் அரசு விடுவித்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், விடுவிக்கப்பட்ட குற்றவாளிகள் 2 வாரங்களுக்குள் மீண்டும் சிறைக்கு திரும்ப வேண்டும் என்ற தீர்ப்பை விடுதலை சிறுத்தைகள் கட்சி வரவேற்கிறது.
வரலாற்று சிறப்புமிக்க இத்தீர்ப்பின் மூலம் இந்தியாவில் ஜனநாயகமும், சட்டத்துறையும் மேன்மையோடு உள்ளது என்பது நிரூபணமாகிறது. இதன் மூலம் நாட்டில் ஜனநாயகம் மீட்டெடுக்கப்பட்டு உள்ளது. உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு, பாஜக மற்றும் சங்பரிவார் அமைப்புகளுக்கு கிடைத்த மரண அடியாகும். தமிழக மக்கள் 2 அணிகளை சார்ந்துதான் காலம், காலமாக வாக்களித்து வருகிறார்கள்.
இனி நடைபெறும் தேர்தல்களிலும் இதுதான் அவர்களின் நிலைப்பாடு. 3-வது அணி என்பதை மக்கள் ஏற்க மாட்டார்கள். தேர்தலில் 3-ஆவது அணிக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள். பாஜகவுடன் கூட்டணியை முறித்துக் கொண்டதால், சிறுபான்மையினர் வாக்குகள் கணிசமாக கிடைக்கும் என்ற மாயையை அதிமுக மக்களிடம் பரப்பி வருகிறது. இது ஏற்புடையது அல்ல. அதிமுகவுக்கும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கும்தான் கருத்து வேறுபாடே தவிர, மற்றபடி பாஜகவுடன் அதிமுக இணக்கமாகத்தான் உள்ளது.
மத்திய அரசு, தமிழகத்தைச் சேர்ந்த எஸ்.சி, எஸ்.டி. பிரிவினருக்கு ஒதுக்கும் நிதியை படிப்படியாக குறைத்து, அவர்களுக்கு துரோகம் செய்து வருகிறது. அப்பிரிவு மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகையையும் குறைத்து வருகிறது. பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், இந்திய ஜனநாயகத்துக்கு பாதுகாப்பற்ற நிலை உருவாகும். இந்தியாவில் மதவெறி சக்திகள் தலைதூக்கும். நடைபெற உள்ள மக்களவைத் தேர்தல் என்பது, பாஜகவிடமிருந்து இந்தியாவை மீட்பதற்கான மீண்டும் ஒரு சுதந்திரப் போராட்டம்.
பாஜக அரசை அகற்றவே விடுதலை சிறுத்தைகள் கட்சி திருச்சியில் வரும் 26ஆம் தேதி வெல்லும் ஜனநாயகம் என்ற மாநாட்டை நடத்துகிறது. இம்மாநாட்டில் தமிழக முதலமைச்சர் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்” என்று கூறினார். பேட்டியின்போது மாவட்டச் செயலர் ம.சுதாகரன், துணைச் செயலர் கு.விவேக் உள்ளிட்டோர் உடனிருந்தனர். முன்னதாக அவர் குடியாத்தம் காந்தி நகரில், கட்சியின் வேலூர் மேற்கு மாவட்ட அலுவலகத்தை திறந்து வைத்தார்.
இதையும் படிங்க: "ராகுல் காந்தியின் 2ஆம் கட்ட நடைப்பயணம் இந்திய கூட்டணிக்கு வலு சேர்க்கும்" - திருநாவுக்கரசர் எம்.பி!