வேலூர்: தமிழ்நாடு அரசின் அராஜக போக்கை கிராமம் தோறும் வீடு வீடாகச் சென்று விசிகிவினர் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 'மகளிர் எழுச்சி மக்கள் மீட்சி' என்ற கருத்து பரப்புரை இயக்கம் நாளை (நவ. 2) முதல் மூன்று நாள்களுக்கு நடைபெற இருப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
வேலூரில் கடந்த அக். 26ஆம் தேதி உடல்நலக்குறைவால் உயிரிழந்த விசிகவின் வேலூர் மாவட்டச் செயலாளர் சன்னி போஸ் திருவுருவப் படத்திற்கு அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் தளபதிகளில் ஒருவராக செயல்பட்ட பிரிகேடியர் சுப. தமிழ்ச்செல்வன் நினைவு தினத்தை ஒட்டி அவரது திருவுருவப் படத்திற்கும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன், "தமிழ்நாட்டில் மதத்தின் பெயரால் வன்முறைகளைத் தூண்டுவதற்கு பாஜக, சங் பரிவார் அமைப்புகள் தீவிரமாக முயற்சித்து வருகின்றது. தமிழ்நாட்டில் காவல் துறையினரால் தேடப்பட்டு வரும் குற்றவாளிகள் அனைவரும் பாஜகவில் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர். அவர்களை வைத்துக்கொண்டு சமூக வலைதளங்களில் இழிவான செயல்களை பாஜக செய்துவருகிறது.
பாஜக மக்களின் உண்மையான பிரச்சினைகளுக்கு போராடாமல் மதவெறியைத் தூண்டும் வேலைகளில் தொடர்ந்து ஈடுபட்டுவருகிறது. இந்தப் போக்குக்கு அதிமுக அரசு தொடர்ந்து ஒத்துழைப்பு அளித்து வருகிறது. கண்டும் காணாமல் இருப்பதோடு பாஜகவின் செயல்பாடுகளுக்கு சிறப்பு சிவப்பு கம்பளம் விரித்து வருகிறது. இத்தகைய செயல்பாடுகள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோருக்கு செய்யப்படும் துரோகம் என்பதை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு விசிக சுட்டிக்காட்டுகிறது. பாஜகவின் நோக்கம் திமுக தலைமையிலான கூட்டணியை பலவீனப்படுத்துவதுதான் அது ஒரு காலமும் நடக்காது. இதற்காக மதவெறியை தூண்டுவது, வெறுப்பு அரசியலை பரப்புவது ஏற்புடையது அல்ல. தமிழ்நாடு அரசு இதனை வேடிக்கை பார்க்கக் கூடாது.
தமிழ்நாட்டில் பாஜக நடத்தும் வேல் யாத்திரை வன்முறையை தூண்டுவதற்கான சூழ்ச்சி. பாஜக தங்களது கொள்கைகளை மக்களிடம் பேசி வாக்குகளை பெறமுடியாது. ஆகையால், பெண்களை முன்னிறுத்தி எவ்வளவு கீழ் தரமாக அரசியல் செய்ய முடியுமோ அவ்வளவு கீழ் தரமாக அரசியல் செய்கிறது. பெண்களுக்கு எதிராக யார் இருக்கிறார்களோ, யார் ரவுடி தனம் செய்கிறார்களோ அவர்களுக்கெள்ளாம் பதவி கொடுத்து மக்களை அச்சுறுத்துவதுதான் பாஜகவின் தேசிய கொள்கையாக உள்ளது" என்றார்.
இதையும் படிங்க: ”நான் இஸ்லாமியரோ, சீக்கியரோ அல்ல, இந்து... இந்து மதம் குறித்துதான் என்னால் பேச முடியும்” - திருமாவளவனுடன் சிறப்பு நேர்காணல்