கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க, தற்போது மூன்றாவது முறையாக மே.17 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இந்தநிலையில், நேற்று (மே.10) முதல் தமிழ்நாடு அரசு 34 வகையான சிறு, குறு தொழில் நிறுவனங்கள் இயங்குவதற்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டது.
இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் தேவஸ்தானம், செட்டியப்பனூர் ராமநாயக்கபேட்டை, கிரிசமுத்திரம் ஆகிய நான்கு கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை தவிர, மற்ற பகுதிகளில் தேனீர் கடைகள் உள்ளிட்ட கடைகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, அப்பகுதிகளில் வழக்கம் போல் கடைகள் இயங்கத் தொடங்கின.
இந்தநிலையில், வட்டாட்சியர் சிவ பிரகாசம், நகராட்சி ஆணையாளர் சிசில் தாமஸ் ஆகியோர் தலைமையில், வருவாய்த்துறையினர், நகராட்சி பணியாளர்கள் அனைத்து பகுதிகளிலும் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் இயங்கி வந்த ஒரு சலூன் கடை உட்பட 4 கடைகளுக்கு வருவாய்த் துறையினர் பூட்டுப்போட்டனர்.
தொடர்ந்து அரசு விதித்த விதிமுறைகளின்படி, அத்தியாவசியப் பொருள்களை வாங்க வரும் பொது மக்கள், விற்பனை செய்பவர் தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும், முகக் கவசம் அணிய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தினர்.
மேலும் தகுந்த இடைவெளியைப் பின்பற்றாமலும், அரசு விதித்த விதிமுறைகளை பின்பற்றாலும் காய்கறி, பழங்களை விற்பனை செய்த கடைகள், சாலையோர, தள்ளுவண்டி கடைகளையும், அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த பழங்கள், பொருள்களை பறிமுதல் செய்த நகராட்சி அலுவலர், அவற்றை சாலையில் வீசியும், தள்ளு வண்டி கடைகளை கீழே தள்ளியும் அடாவடியில் ஈடுபட்டார். இதற்கு சாலையோர வியாபாரிகள், பொது மக்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.