வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்துள்ள மேல் பள்ளிப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி ஜெயபிரகாஷ். இவருக்கும் இவரது மனைவி பாரதிக்கும் 4 வயதில் ஒரு பெண் குழந்தை, 2 வயதில் ஒரு ஆண் குழந்தை இருந்தனர். ஜெயபிரகாஷ், அவரது மனைவி பாரதி இருவரும் அதே பகுதியில் உள்ள முருகேசன் என்பவருக்கு சொந்தமான செங்கல் சூளையில் கூலித் தொழிலாளிகளாக பணிபுரிந்து வருகின்றனர்.
செங்கல் சூளைக்கு அருகிலேயே உள்ள ஒரு வீட்டில் இவர்கள் வசித்து வந்த நிலையில், நேற்று மாலை குழந்தைகள் இருவரும் வீட்டின் அருகில் விளையாடிக்கொண்டிருந்தபோது எலி பிடிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த எலி மருந்து பாக்கெட் கீழே விழுந்துள்ளது. அந்த பாக்கெட்டில் இருந்த எலி மருந்தினை வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த குழந்தை தவறுதலாக சாப்பிட்டுள்ளது. பின்னர், சிறிது நேரத்திலேயே குழந்தை தேவிஸ் மயக்கமடைந்து விழுந்துள்ளார். அதைக்கண்ட அவருடைய தாயார் பாரதி, ஜெயபிரகாஷ் இருவரும் அலறியடித்து குழந்தையை தூக்கிக்கொண்டு வாணியம்பாடி அரசு மருத்துவனையில் சேர்த்துள்ளனர்.
ஆனால், மருத்துவமனையில் குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். பின்னர் குழந்தையின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இச்சம்பவம் குறித்து வாணியம்பாடி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:
பெற்ற குழந்தையை விற்ற தாய் - மூவரை அதிரடியாக கைது செய்த காவல்துறை!