வேலூர்: கே.வி.குப்பம் மற்றும் அதன் சுற்றுப்புறக் கிராமங்களில் கடந்த சனிக்கிழமை (மார்ச் 18) இரவு பலத்த மழை பெய்தது. அப்போது பலத்த சூறைக்காற்றுடன் கூடிய ஆலங்கட்டி மழையும் ஆங்காங்கே பெய்துள்ளது. இதன் காரணமாக பல இடங்களில் மின் கம்பங்கள், மரங்கள் மற்றும் வீடுகள் ஆகியவை பாதிப்புக்கு உள்ளாகின.
அந்த வகையில் கே.வி.குப்பம் அடுத்த வேப்பங்கனேரி ஊராட்சி ரயில்வே கேட்டை ஒட்டிய பட வேட்டம்மன் கோயில் வளாகத்தின் முன்புறம் இருந்த, சுமார் 50 ஆண்டு கால பழமை வாய்ந்த மரம் வேரோடு சாய்ந்தது. இதனையடுத்து ஊராட்சி நிர்வாகம் சார்பில் நேற்று முன்தினம் (மார்ச் 23), சாய்ந்து விழுந்து கிடந்த மரத்தின் கிளைகளை வெட்டும் பணி நடைபெற்றது.
இதன் முடிவில் மரம் முழுவதும் வெட்டிவிட்டு அடிப் பகுதியை மட்டும் அப்படியே போட்டு விட்டுச் சென்றதாக கூறப்படுகிறது. இதனிடையே நேற்று (மார்ச் 24) காலை மீண்டும் வந்து பார்த்தபோது அங்குள்ள மக்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். ஏனென்றால், வேருடன் சாய்ந்து தரையில் கிடந்த மரத்தின் அடிப்பகுதி தானாக எழுந்து நின்ற நிலையில் இருந்து உள்ளது. இது குறித்த தகவல் பரவியதும் அப்பகுதி மக்கள் வியப்புடன் பார்த்து வருகின்றனர். மேலும் மரத்திற்கு பூஜை செய்தும் பொதுமக்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர்.
மேலும் இதுகுறித்து ஈடிவி பாரத் செய்தியாளர் தொலைபேசி வாயிலாக கே.வி.குப்பம் ஊர் தலைவர் மோகனிடம் கேட்டபோது, “சாய்ந்து விழுந்து கிடந்த மரத்தின் கிளைகள் அகற்றப்பட்டதால், மரத்தின் எடை குறைந்துள்ளது. இதனால் மரம் அதன் புவிஈர்ப்பு சக்தியால் தானாகவே எழுந்து நின்றுள்ளது. இதனால் இந்த மரம் மீண்டும் துளிர்விட்டு வளரவும் வாய்ப்பு உள்ளது” என கூறினார்.
இதையும் படிங்க: கருவேப்பிலைக்குள் மறைத்து ஐம்பொன் சிலை கடத்தல்.. வேலூரில் இருவர் சிக்கியது எப்படி?